காங்கிரஸ் கட்சி சார்பில் நாராயணசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்


காங்கிரஸ் கட்சி சார்பில் நாராயணசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 30 May 2017 11:00 PM GMT (Updated: 30 May 2017 8:47 PM GMT)

முதல்–அமைச்சர் நாராயணசாமியின் பிறந்தநாள் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியின் பிறந்தநாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாட்பட்டது. இதையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் காங்கிரசார் தங்கத்தேர் இழுத்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதங்களையும் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

70 கிலோ கேக்

அதன்பின் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 70 கிலோ எடையுள்ள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து காங்கிரசாருக்கு பட்ஜெட் புத்தகத்துடன் கூடிய பைகள் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:–

நமது முதல்–அமைச்சர் நாராயணசாமி எந்த பொறுப்பினை ஏற்றாலும் அதற்கு ஏற்ப சிறப்பாக செயல்படுவார். அவர் கட்சி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார். கட்சியின் தலைவர், அகில இந்திய செயலாளர், பொதுச்செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அரவணைத்து செல்கிறார்

கட்சியிலும், ஆட்சியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அனைவரையும் அரவணைத்து செல்வதில் அவர் வல்லவர். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை புறந்தள்ளிவிட்டு கட்சி வளர்ச்சிக்காக ஒற்றுமையாக பாடுபடுவார். பல்வேறு காரணங்களுக்காக சிலருக்கு மனக்கஷ்டம் இருந்தாலும் அவர்களையும் அழைத்து பேசுவார்.

அதிகாரிகளை அழைத்துப்பேசி வலிமையாக நிர்வாகத்தை நடத்தி வருகிறார். 70 வயதை தொட்டாலும் சுறுசுறுப்புடன் பயணிக்கிறார். எத்தனை நிகழ்ச்சிகள் இருந்தாலும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் காலதாமதமின்றி கலந்துகொள்கிறார். அவர்கள் நீண்டகாலம் வாழ உடல்வலிமையையும், மனவலிமையையும் இறைவன் தரவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

அமைச்சர்கள்

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேலு, முன்னாள் முதல்–அமைச்சர் ராமச்சந்திரன், புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ.கே.டி.ஆறுமுகம், குமரேஸ்வரன், கண்ணன், சேகர் என்ற மகாலிங்கம், ஜி.பி.கே.பரமசிவம், சுரேஷ், ஆல்பா பாஷிங்கம், சங்கர், செந்தில்குமரன், சீனுவாசமூர்த்தி, ஜோசப், சண்முகம், வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாராயணசாமியின் பிறந்தநாளையொட்டி புதுவையின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை காங்கிரசார் வழங்கினார்கள். இளைஞர் காங்கிரசார் அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததானம் செய்தனர்.


Next Story