முறைகேடாக செயல்படும் சாய தொழிற்சாலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் அமைச்சர் பேட்டி


முறைகேடாக செயல்படும் சாய தொழிற்சாலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 30 May 2017 10:00 PM GMT (Updated: 2017-05-31T03:19:30+05:30)

முறைகேடாக செயல்படும் சாய தொழிற்சாலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்தார்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை பகுதிகளில் 62 கைத்தறி நூல் சாய தொழிற்சாலைகள் இயங்கி வந்தது. இந்த சாய தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மாசு கட்டுப்பாட்டு சட்ட திட்டங்களின்படி செயல்படாத காரணத்தால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி மூடப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் சாய தொழிற்சாலையை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று சாய தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை பகுதிகளில் உள்ள சாய தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பட்டு பூங்கா

சாய தொழிற்சாலை உரிமையாளர்களிடமும் மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் கே.சி.கருப்பண்ணன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

தமிழகத்தில் முறைகேடாக செயல்படும் சாய தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அந்த தொழிற்சாலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காஞ்சீபுரம் பட்டு பூங்காவுக்கு ஒரு வாரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் முறைகேடாக செயல்படும் சாய தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் காஞ்சீபுரம் பட்டுபூங்கா அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி, முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் சுந்தரகோபால், இணை தலைமை சுற்றுச்சூழல் என்ஜினீயர் குமார், சுத்திகரிப்பு நிலைய இயக்குனர் சுகுமார், பட்டு பூங்கா தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story