ஆன்லைன் வர்த்தகம்- சரக்கு, சேவை வரி எதிர்ப்பு: மருந்து கடைகள், ஓட்டல்கள் அடைப்பு


ஆன்லைன் வர்த்தகம்- சரக்கு, சேவை வரி எதிர்ப்பு: மருந்து கடைகள், ஓட்டல்கள் அடைப்பு
x
தினத்தந்தி 30 May 2017 10:45 PM GMT (Updated: 30 May 2017 10:01 PM GMT)

ஆன்லைன் வர்த்தகம்- சரக்கு, சேவை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டத்தில் 750 மருந்து கடைகள், ஓட்டல்கள் நேற்று அடைக்கப்பட்டன.

தர்மபுரி,

இந்தியா முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கும் சட்டமசோதாவை விரைவில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு மருந்து வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மருந்து கொள்முதல் மற்றும் விற்பனையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை, மருந்து உரிம கட்டணத்தை உயர்த்தும் முயற்சி ஆகியவற்றை கண்டித்து அகில இந்திய அளவில் நேற்று மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் 250 மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. அதேநேரத்தில் உயிர் காக்கும் மருந்துகள் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி கிடைக்க மருந்து வணிகர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். மருந்துக்கடைகள் மூடப்பட்டதால் நேற்று பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை கடைகளில் வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங் களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வகையான மருந்துகளும் வழங்கப்பட்டன.

ஓட்டல்கள், பேக்கரிகள்

இதேபோல் மத்திய அரசின் சரக்கு, சேவை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஓட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் 500 ஓட்டல்கள், பேக்கரி கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன.

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் பெரும்பாலான ஓட்டல்களும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் லாரி டிரைவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் தேவையான நேரத்தில் உணவு கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதேநேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறிய ஓட்டல்கள், மெஸ்கள் வழக்கம்போல் செயல்பட்டன.


Related Tags :
Next Story