பொதுமக்கள் எதிர்ப்பால் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் பணி நிறுத்தம்


பொதுமக்கள் எதிர்ப்பால் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 30 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-31T03:32:07+05:30)

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மணத்தட்டை காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

குளித்தலை,

குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி அமைக்கும் பணி மேற்கொள்ளும் பொருட்டு, ஆற்றில் லாரிகள் மூலம் மணல் எடுத்துச்செல்லும் வகையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் தேவதானம் காவிரி ஆற்றுப்பகுதியில் பாதை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை மேற்கொண்டனர்.

இதை அறிந்த மணத்தட்டை, தேவதானம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றுப்பகுதிக்கு வந்து, மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு பாதை அமைப்பதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த வாழை செத்தைகளை தீ வைத்து கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.

பாதை அமைக்கும் பணி

இந்த நிலையில் மீண்டும் தேவதானம் காவிரிஆற்றுப் பகுதியில் பாதை அமைப்பதற்காக குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் கொளஞ்சிநாதன், தொழில்நுட்ப உதவியாளர் குருசாமி ஆகியோர் நேற்று காலை 11 மணியளவில் அங்கு வந்தனர். இதை அறிந்த மணத்தட்டை மற்றும் தேவதானம் பகுதி பொதுமக்கள் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாதை அமைக்கும் பணி நடைபெறவில்லை.

பேச்சுவார்த்தை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமோகன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குளித்தலை கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகிய இருவரும் பணி நிமித்தமாக சென்றுவிட்டனர்.

ஆகவே இந்த அதிகாரிகளின் தலைமையில் இப்பிரச்சனை குறித்து ஒரு நாள் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்றும், அதுவரை இப்பகுதியில் எவ்வித பணியும் மேற்கொள்ளப்படாது என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story