மத்திய அரசின் சேவை வரி உயர்வை கண்டித்து பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டன


மத்திய அரசின் சேவை வரி உயர்வை கண்டித்து பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 30 May 2017 11:15 PM GMT (Updated: 2017-05-31T03:34:05+05:30)

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டன.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தென்மாநில ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மே 30–ந்தேதி (அதாவது நேற்று) ஒரு நாள் ஓட்டல்கள் அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று ஓட்டல்கள் அடைக்கப்பட்டன.

பிரபல ஓட்டல்கள் அடைப்பு


குமரி மாவட்டத்திலும் ஏராளமான ஓட்டல்கள் நேற்று திறக்கப்படவில்லை. மாவட்டத்தில் மார்த்தாண்டம், குளச்சல், தக்கலை, பத்மனநாபபுரம், கருங்கல் ஆகிய இடங்களில் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்தன. நாகர்கோவிலில் வடசேரி, மீனாட்சிபுரம், கோட்டார் ஆகிய இடங்களில் உள்ள பிரபல ஓட்டல்கள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன. சிறிய அளவிலான ஓட்டல்களில் வழக்கம்போல வியாபாரம் நடந்தது.

இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘மத்திய அரசு உயர்த்தியுள்ள சரக்கு சேவை வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டம் முழுவதும் 600–க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. வரி உயர்வை ஓட்டல் உரிமையாளர்கள் சமாளிக்க வேண்டுமெனில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டி இருக்கும். அவ்வாறு உணவு பொருட்களின் விலையை உயர்த்தினால் ஓட்டல்களுக்கு சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே சரக்கு சேவை வரி உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்‘ என்றனர்.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்பட்டது.

Related Tags :
Next Story