சரக்கு, சேவை வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் 350 ஓட்டல்கள் அடைப்பு


சரக்கு, சேவை வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் 350 ஓட்டல்கள் அடைப்பு
x
தினத்தந்தி 30 May 2017 11:43 PM GMT (Updated: 2017-05-31T05:13:39+05:30)

சரக்கு, சேவை வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் 350 ஓட்டல்கள் நேற்று அடைக்கப்பட்டன.

சேலம்,

நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக வருகிற ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரி விதிப்பு முறைக்கு வணிகர்கள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சரக்கு மற்றும் சேவை வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஓட்டல் உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டன.

தள்ளுவண்டி கடைகள்

குறிப்பாக சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் 350 ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சங்கத்தில் பதிவு செய்யப்படாத சிறிய ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் பல திறந்திருந்தன. சேலம் மாநகரில் சேலம்–ஓமலூர் ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், அழகாபுரம், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பெரிய ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்ததால் வெளியூர்களில் இருந்து தொழில் வி‌ஷயமாக சேலம் வந்திருந்தவர்கள் பலர் உணவிற்காக சிரமம் அடைந்தனர்.


Next Story