கம்பம் பகுதியில் அதிக ஆட்களுடன் அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கம்பம் பகுதியில் அதிக ஆட்களுடன் அதிவேகமாக ஆட்டோக்கள் செல்கின்றன. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கம்பம்,
கம்பம்–குமுளி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்களிலேயே அவர்கள் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களில் அதிக அளவு ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர். அதே நிலை தான் சரக்கு வாகனங்களிலும் உள்ளது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும், அதனையும் மீறி ஆட்களை ஏற்றிச்செல்வது தொடர்கதையாகவே உள்ளது.
அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள்மேலும் தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் அதிவேகமாக செல்கின்றன. விரைவில் தோட்டப்பகுதிக்கு சென்றால் அங்கு காத்திருக்கும் பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பிவரலாம். அதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் தங்கள் வாகனங்களை வேகமாக ஓட்டுகின்றனர். இதனால் ஆட்டோக்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு விபத்து ஏற்பட்டால் பெரும் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் ஏற்றிச்செல்லப்படுவதையும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வதையும் தடுக்க போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் கம்பம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆட்டோக்களில் கூடுதல் ஆட்களை ஏற்றிச்செல்வதையும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.