சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது 2 வாலிபர்கள் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 1 Jun 2017 3:45 AM IST (Updated: 1 Jun 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள வெளி நாட்டு பணத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. அந்த விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த விமானத்தில் ஏற வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சுற்றுலா விசாவில் செல்வதற்காக வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ரூ.50 லட்சம் வெளிநாட்டு பணம்

அப்போது சென்னையை சேர்ந்த மஜீத்கான் ஜலாலுதீன் (வயது 35), சுல்தான் (30) ஆகியோரது சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தபோது துணிகள் மற்றும் புத்தகங்களுக்கு இடையே அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த பணத்தை மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் மஜீத்கான் ஜலாலுதீன், சுல்தான் ஆகியோரது விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், 2 பேரையும் கைது செய்தனர்.

அதிகாரிகள் விசாரணை

பறிமுதலான வெளிநாட்டு பணத்துடன் விசாரணைக்காக 2 பேரையும் சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூருக்கு கடத்திச்சென்று கொடுத்தால் விமான டிக்கெட் மற்றும் செலவுகள் போக தலா ரூ.10 ஆயிரம் தருவார்கள் என்பதால் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான 2 பேரும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.


Next Story