இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை: கர்நாடக அரசு சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யப்படும்.
மைசூரு,
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் ரூ.295 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த பணிகளை தொடங்கி வைக்க முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்தார். பிரியப்பட்டணா அருகே பைலுகுப்பே பகுதியில் உள்ள ஹெலிபேடு மைதானத்தில் வந்து இறங்கிய சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடக மாநில முதல்–மந்திரியாக எடியூரப்பா இருந்த போது விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் அவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் தலைமையிலான பா.ஜனதா அரசு கடனை தள்ளுபடி செய்யவில்லை. மேலும் சட்டசபை கூட்டத்திலும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று எடியூரப்பா கூறிவிட்டார். ஆனால் தற்போது மட்டும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநில அரசிடம் கூறி வருகிறார். விவசாயிகள் கடன் தள்ளுபடி விஷயத்தில் ஆட்சியில் இருந்த போது ஒரு பேச்சும், ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சும் பேசி வருகிறார். எடியூரப்பா இரட்டை நாக்கு படைத்தவர். விவசாயிகள் கடனை மத்திய அரசு தான் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேல்முறையீடு செய்யப்படும்எடியூரப்பா மாநிலத்தின் நிலைமை தெரியாமல் பேசி வருகிறார். அவர் பாராளுமன்ற கூட்டத்தில் விவசாயிகளை பற்றியோ, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதை பற்றியோ ஒரு நாள் கூட பேசியது கிடையாது. விவசாயிகள் மீது அக்கறை உள்ளவராக இருந்தால் பாராளுமன்றத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வது பற்றி பேசட்டும்.
சந்தையில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு அமல்படுத்தி இருக்கும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து கர்நாடக சட்டசபை கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும். தேவைப்பட்டால் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடும் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.