விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உதுமான் முகைதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாந்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காவிரி பாசன விவசாயிகள் நல சங்கம் சார்பில் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன் பேசுகையில், ஜூன் 12–ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காவது தண்ணீர் திறந்து விட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனால் வண்டல் மண் எடுக்க செல்லும் விவசாயிகளுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க குளங்களின் எல்லையில் கல் நட வேண்டும், என்றார்.
போராட்டம்தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தனது சங்கத்தை சேர்ந்த விவசாயிகளுடன் கலெக்டர் முன் முழங்காலிட்டு துண்டு ஏந்தி பிச்சை எடுப்பது போல் போராட்டம் நடத்தினார். அப்போது அவர்கள் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும், என்று கோஷம் போட்டனர்.
மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் கிடைக்காத விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை வழங்க வேண்டும், மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம் பேசினார்.
பொன்னணியாறு அணைத.மா.கா. விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் பேசுகையில், விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே மேல் முறையீட்டை திரும்ப பெற்று கடன் தொகை ரூ.1,980 கோடியை முழுமையாக தள்ளுபடி செய்து 3 லட்சத்து 2 ஆயிரம் விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுகா மானாவாரி மற்றும் இறவை பாசனதாரர்கள் விவசாயிகள் சங்க தலைவர் அப்துல்லா பேசுகையில், மணப்பாறை, மையம்பட்டி பகுதிகளில் உள்ள குளங்களை தூர் வார வேண்டும், மின் திருட்டுக்கு துணை போகும் மின்சார வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பொன்னணியாறு அணையை தூர்வார வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.
ஆர்ப்பாட்டம்தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை, அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்க தலைவர் வீரசேரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் அயிலை சிவசூரியன், ராஜா சிதம்பரம் ஆகியோரும் பயிர் கடன் தள்ளுபடி குறித்து பேசினார்கள். திருப்பூர் மாவட்டத்திற்கு மாறுதல் ஆகி செல்ல இருக்கும் கலெக்டர் பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்காக செய்த பணிகள் குறித்து சங்க தலைவர்கள் பாராட்டி பேசினார்கள். முன்னதாக பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.