சசிகுமார் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி கோவையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
சசிகுமார் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை,
கோவை மாநகர இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, சசிகுமார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இந்த கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் கிஷோர்குமார், கோவை கோட்ட செயலாளர் குணா, மாநில பேச்சாளர் மூகாம் பிகை மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கேள்விக்குறிசசிகுமார் கொலை செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகிறது. ஆனால் தலைமறைவான குற்றவாளிகள் இது வரை கைது செய்யப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார் சரியாக செயல்படாததை இது காட்டுகிறது. எனவே இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
தமிழகத்தில் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவது, அவர் கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
நக்சலைட்டுகளுக்கு பயிற்சிகோவை, திருப்பூரில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. தேனி, கம்பம் பகுதியில் அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உளவுத்துறை அதிகாரிகள் எதுவும் தெரியாதது போன்று அமைதியாக இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
மேற்கு வங்காளம், வங்காளதேசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிலர் திருப்பூரில் மறைமுகமாக தங்கி இருக்கிறார்கள். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இந்த விஷயத்தில் உளவுத்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி கோஷமிட்டனர். இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன், பொதுச் செயலாளர் சதீஷ், செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.