செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயர் மர்மசாவு
செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி வளாகத்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் என்ஜினீயர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி என்ற தொழிற்பூங்காவில் 100–க்கும் மேற்பட்ட பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்களும் உள்ளன. அங்குள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, தாளவாய்பட்டு கிராமத்தை சேர்ந்த அருணாசல கவுண்டர் என்பவரது மகன் இளையராஜா (வயது 32) என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார்.
பி.இ. முடித்துள்ள இவர் தினமும் தனது வீட்டிலிருந்து வேலைக்கு வந்துசெல்வது வழக்கம். இதுபோல கடந்த 30–ந் தேதி வேலைக்கு வந்தவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அன்று இரவு 11 மணி அளவில் அந்நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் தங்கும் விடுதியில் இளையராஜா பிணமாக கிடந்தார். பிற மாநிலங்களில் இருந்து புதிதாக வேலைக்கு வந்தவர்கள் தங்குவதற்கும், இரவு பணிபுரிபவர்கள் பணி முடிந்ததும் தூங்குவதற்கும் இந்த விடுதியை பயன்படுத்தி வருவது வழக்கம்.
சாவில் மர்மம்அந்த நிறுவனத்திலிருந்து இளையராஜாவின் மனைவி ரேவதிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். அதில் பேசிய நபர், உங்கள் கணவர் உடல்நல குறைவால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது, இளையராஜா பிணமாக பிணவறையில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு கதறி அழுதார்.
தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசில் ரேவதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் என்ன?கடந்த சில நாட்களாக தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பலர் வேலை இழந்து வருகின்றனர். இதில் தங்களது மாத வருமானத்தை கொண்டு வீட்டுக்கடன், வாகன கடன் உள்பட பல கடன்களை வாங்கியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மற்றவர்களைப்போல தனக்கும் வேலை பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இளையராஜா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இளையராஜாவின் மூக்கு அருகே ரத்தம் உறைந்து இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இது கொலையாக இருக்குமோ? என்றும் போலீசார் சந்தேகப்படுகின்றனர். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும்.