இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்பது மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்


இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்பது மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்
x
தினத்தந்தி 1 Jun 2017 4:30 AM IST (Updated: 1 Jun 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்பது மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என்று உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.

உடுமலை,

சந்தையில் இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்ற மத்திய அரசின் சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்ற மத்திய அரசின் சட்டத்தை திரும்பப்பெற அடித்தளமாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு இனமக்கள் பலவகை உணவு பழக்கத்தை கொண்டுள்ளனர். மாட்டு இறைச்சியை உணவாக பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மாட்டு இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டம் ஏற்புடையதல்ல. இது மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். மக்களின் உணவுப்பழக்கத்திற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உரிமை இல்லை.

பிரிவை ஏற்படுத்தக்கூடாது

மத நல்லிணக்கத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது. நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமே தவிர மக்களிடம் பிரிவை ஏற்படுத்தக்கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். புதுச்சேரியில் இந்த சட்டத்தை தைரியமாக எதிர்த்துள்ளனர். ஆனால் தமிழக அரசு மவுனமாக இருப்பது ஏன்? இதில் தமிழக அரசின் நிலை என்ன என்று கூற வேண்டும்.

தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த அரசா? மக்கள் விரோத அரசா? அங்கு நடப்பது தனிப்பட்ட ஆட்சியா? அல்லது வேறு யாரும் ஆட்சியை நடத்துகிறார்களா?. இந்த சட்டத்தை தமிழக அரசு ஏற்காது என்று குரல் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு உள்ளொன்று வைத்துக்கொண்டு புறமொன்று என்ற நிலையில் இருக்கக்கூடாது. இந்தியாவில் பல மதங்கள் உள்ளன. மத்திய அரசு, மக்களின் உணர்வுகளை மீறி செயல்படாத வகையில் இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

நீதி விசாரணை

ஐ.ஐ.டி. மாணவர் தாக்கப்பட்டதற்கு அடித்தளம் இந்த பிரச்சினைதான். அந்த மாணவர் தாக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஒற்றுமையை மத்திய அரசு பேணி காக்க வேண்டும். தனி மனித உரிமையை பாதிக்கும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத்தலைவர் டி.ரத்தினவேல் வரவேற்றுப்பேசினார். மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் யு.கே.பி.முத்துக்குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். முடிவில் உடுமலை நகரத்தலைவர் ஏ.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

கொப்பரைக்கு விலை

இதைத்தொடர்ந்து த.மா.கா.திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் சிறப்புக்கூட்டம் உடுமலையை அடுத்துள்ள போடிபட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:–

தேங்காய் கொப்பரைக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.110 நிர்ணயிக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, திண்டுக்கல், திருச்சி வழியாக சென்னைக்கு உடனடியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட வேண்டும். உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக திட்டச் சாலைகள் மற்றும் சுற்றுவட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

வறட்சி நிவாரண நிதி

உப்பாறு அணையை பி.ஏ.பி. திட்டத்தில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டு வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை பி.ஏ.பி.திட்டத்தில் இணைக்கப்படவில்லை. உடனடியாக இணைக்கப்பட வேண்டும்.

மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு, மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ரே‌ஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.


Next Story