சோழவந்தான் அருகே வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்; சப்–இன்ஸ்பெக்டர் கைது
சோழவந்தான் அருகே வழக்கில் இருந்து 3 பேரை விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கையும், களவுமாக பிடிபட்டார்.
சோழவந்தான்,
மதுரை மாவட்டம், சோழவந்தான் குருவித்துறையைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 32). சமீபத்தில் இவர் காடுபட்டியில் நிலம் வாங்கி உள்ளார். அந்த நிலத்திற்கு அருகில் முன்னாள் ராணுவ வீரர் குமாரவேல் என்பவருக்கு சொந்தமான 5 சென்ட் இடம் உள்ளது. இருவருடைய நிலத்துக்கு நடுவே 10 அடி அகலம் கொண்ட பொதுப்பாதை இருந்தது.
இந்தநிலையில் தெய்வேந்திரன் தன்னுடைய நிலத்தில் வீடு கட்டி வந்தார். அதன் ஒரு பகுதியாக கழிப்பறையை பொதுப்பாதையில் கட்டுவதற்காக குழி தோண்டியுள்ளார். இதனை குமாரவேல் தட்டிக்கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் குமாரவேல் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து காடுபட்டி போலீஸ் நிலையத்தில் குமாரவேல் அளித்த புகாரின்பேரில் தெய்வேந்திரன், தங்கப்பாண்டி, ராஜ்குமார், ஜெயபாண்டி, சசிக்குமார், விமலா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரூ.15 ஆயிரம் லஞ்சம்இந்த நிலையில் தகராறு நடந்த இடத்தில் ஜெயபாண்டி, சசிக்குமார், விமலா ஆகியோர் இல்லை என்றும், இந்த வழக்கில் இருந்து அவர்களின் பெயரை விடுவிக்குமாறும் காடுபட்டி சப்–இன்ஸ்பெக்டர் கெலிஸ்டஸ் ராஜ்குமாரிடம் தெய்வேந்திரன் கேட்டுள்ளார். அப்படியானால் இதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
இது குறித்து லஞ்சஒழிப்பு போலீசில் தெய்வேந்திரன் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த அறிவுரையின்படி தெய்வேந்திரன் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு நேற்று காடுபட்டி போலீஸ்நிலையம் சென்றார்.
சப்–இன்ஸ்பெக்டர் கைதுஅங்கு பணியில் இருந்த சப்–இன்ஸ்பெக்டர் கெலிஸ்டஸ் ராஜ்குமாரிடம் ரூ.15 ஆயிரத்தை தெய்வேந்திரன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான போலீசார் கெலிஸ்டஸ்ராஜ்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.