தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாட்டு இறைச்சி சமைத்து சாப்பிடும் போராட்டம்
புதுவை நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாட்டு இறைச்சி சமைத்து சாப்பிடும் போராட்டம் நடந்தது.
புதுச்சேரி,
கால்நடை சந்தைகளில் மாடுகள், ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதேபோல் புதுவையில் பல்வேறு கட்சியினர் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதுவை சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி மாட்டு இறைச்சி தடையை அமல்படுத்தமாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
மாட்டு இறைச்சி சாப்பிடும் போராட்டம்இந்த நிலையில் புதுவை நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் மாட்டு இறைச்சியை சமைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் சுதேசி மில் அருகே நேற்று ஒன்று திரண்டனர். போராட்டத்துக்கு தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜான்பியர், செயலாளர் சதீஷ், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அவர்கள் ரோட்டில் அடுப்பு வைத்து மாட்டு இறைச்சியை சமையல் செய்தனர். அதனை அவர்கள் சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் மத்திய அரசு, மாட்டு இறைச்சி தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.