கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி புதிய பஸ்நிலையம்
கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி புதிய பஸ்நிலையம் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
புதுச்சேரி,
கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். புதுவை சட்டசபையில் கேள்வி–பதில் நேரத்தில் சிவா எம்.எல்.ஏ. (தி.மு.க.) கேள்வி எழுப்பியதை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–
புதிய பஸ் நிலையம்சிவா: புதுவை நகரப்பகுதிக்கு உள்ளே செயல்பட்டு வரும் தற்போதைய பஸ் நிலையத்தை மாற்றி எதிர்கால நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? உழந்தைகீரப்பாளையத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளீர்களா?
அமைச்சர் நமச்சிவாயம்: புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. உழந்தைகீரப்பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லாத நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
மீன் அங்காடி அருகே..சிவா: உழந்தைகீரப்பாளையத்தில் திட்டம் கைவிடப்பட்ட காரணம் என்ன?
அமைச்சர் நமச்சிவாயம்: உழந்தை ஏரி பகுதியில் பஸ்நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை. தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே பஸ் நிலையம் அமைக்க போதிய இடவசதியும் உள்ளது. அங்குதான் அமைக்க உள்ளோம். ஸ்மார்ட்சிட்டி திட்டத்திலும் அதை சேர்த்துள்ளோம்.
சிவா: புதுவை புதிய பஸ் நிலையம் நகராட்சிக்கு நல்ல வருவாய் தருகிறது. ஆனால் மோசமான நிலையில் உள்ளது. பஸ் நிலையம் அருகேயே ரவுண்டானா அமைக்கவேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.