காரைக்காலில் ரூ.49.96 கோடியில் குடிநீர் திட்டம்
காரைக்காலில் ரூ.49.96 கோடியில் குடிநீர் திட்டம் அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
புதுச்சேரி,
காரைக்காலில் ரூ.49.96 கோடி செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். புதுவை சட்டசபையில் கேள்வி–பதில் நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில்களும் வருமாறு:–
ரூ.49.96 கோடிஅசனா (அ.தி.மு.க.): காரைக்கால் நகரப்பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றிட அரசிடம் ஏதேனும் திட்டம் உண்டா? குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் அரசு மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களின் விவரம் என்ன?
அமைச்சர் நமச்சிவாயம் காரைக்கால் மத்திய மண்டல குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.49.96 கோடிக்கு ஹட்கோ நிதியுதவி பெறப்பட்டு இப்பணிக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
அசோக் ஆனந்து (என்.ஆர்.காங்): தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட சுப்பையா நகரில் உழவர்கரை நகராட்சியின் கீழ் இயங்கி வரும் பாதாள சாக்கடை திட்டத்தினை பொதுப்பணித்துறை மூலம் ஏற்று நடந்த அரசு முன்வருமா?
அமைச்சர் நமச்சிவாயம்: புதிய திட்டத்தில் இணைந்து செயல்படுத்தும் சாத்தியக்கூறுகள் ஆராய்ந்து பின்னர் இணைக்கப்படும்.
மின்பாதைபாஸ்கர் (அ.தி.மு.க.): முதலியார்பேட்டை தொகுதி முழுவதும் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் முதிர்கன்னி ஆகிய எத்தனை நபர்கள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்கள்?
அமைச்சர் கந்தசாமி: முதலியார்பேட்டை தொகுதி முழுவதும் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் முதிர்கன்னி உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்கள். இனிவரும் காலங்களில் உதவித்தொகை பெறுபவர் இறந்தால் அவர் எந்த தொகுதியை சேர்ந்தவரோ? அந்த தொகுதியை சேர்ந்த மற்றொருவரை பயனாளியாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயமூர்த்தி (காங்): அரியாங்குப்பம் முருங்கப்பாக்கம் பகுதியின் மின் தேவையை பூர்த்தி செய்யும் மரப்பாலம் துணை மின்நிலையத்தில் இருந்து தனியாக ஒரே மின்பாதையாக அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
அமைச்சர் கமலக்கண்ணன்: மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த மின்சார வளர்ச்சி திட்டத்தின்கீழ் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீட்டு தொகை ரூ.1.75 கோடி ஆகும்.
நகராட்சி அலுவலகம்கீதா ஆனந்தன் (தி.மு.க.): திருப்பட்டினம் பிறாவடையனாறு பாலம் அருகே சுற்றுலாத்துறை மூலம் விருந்தினர் மாளிகை கட்டும் திட்டம் அரசிடம் உள்ளதா?
முதல்–அமைச்சர் நாராயணசாமி: நிதிநிலைக்கேற்ப பரிசீலனை செய்வோம்.
லட்சுமிநாராயணன் (காங்): வரலாற்றும் பாரம்பரியம் மிக்க புதுவை நகராட்சி கட்டிடம் இடிந்து விழுந்து 3 ஆண்டுகள் ஆகியும் வங்கி நிதியுதவி அளித்தும் இதுவரை ஏன் கட்டி முடிக்கப்படவில்லை?
அமைச்சர் நமச்சிவாயம்: பாரம்பரிய நகராட்சி கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்பு பழுது நீக்குவதற்கும், மறுசீரமைப்பு செய்வதற்கு மட்டுமே உலக வங்கி நிதியுதவி பெறப்பட்டது. தற்போது புதிய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் 2 ஆண்டுகளில் பணி முடிக்கப்படும்.
மேல்நிலைப்பள்ளிடி.பி.ஆர்.செல்வம் (என்.ஆர்.காங்): திருக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப்பள்ளியை மட்டும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமைச்சர் கமலக்கண்ணன்: உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி செயல்படும் சமுதாய நலக்கூடத்தை பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றிய பின்னர் போதுமான வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டதும் தரம் உயர்த்தப்படும்.
கோபிகா (என்.ஆர்.காங்): தனியார் கோவில் திருப்பணிகளுக்கு தற்போது கொடுத்து வரும் நிதியினை உயர்த்தி தர அரசிற்கு எண்ணம் உள்ளதா?
முதல்–அமைச்சர் நாராயணசாமி: இதுகுறித்து நிதிநிலைக்கேற்ப பரிசீலிக்கப்படும்.