சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதை தவிர்க்க மாற்று வழியாக சென்ற வேன் மோதி 2 பேர் காயம்
கருப்பூர் அருகே சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதை தவிர்க்க மாற்று வழியாக சென்ற வேன் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கருப்பூர்,
இதற்கிடையில் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 பேர் காயம்சேலத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 30). இவர் நேற்று பகல் 12 மணி அளவில் சேலத்தில் இருந்து ஒரு பேக்கரிக்கு சொந்தமான வேனில் தின்பண்டங்களை ஏற்றிக் கொண்டு ஓமலூர் நோக்கி சென்றார். கோட்டகவுண்டம்பட்டி அருகே சென்றபோது, கோட்டகவுண்டம்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு மினி லாரி மீது, பேக்கரி வேன் மோதியது.
இதில் மினி லாரியை ஒட்டி வந்த கோட்டகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த குமரேசன் (30), அதே மினி லாரியில் வந்த சாமியப்பன் மகன் 8–ம் வகுப்பு படித்து வரும் பூபதி (13) ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதை தவிர்க்க மாற்று வழியாக கோட்டகவுண்டம்பட்டிக்கு வேன் வந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் போராட்டம்மேலும் கோட்டகவுண்டம்பட்டி வழியாக அதிகளவில் வாகனங்கள் செல்வதால்தான் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது என்று கூறி அந்த பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சுங்கச்சாவடி வழியாக செல்லுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அடிக்கடி விபத்துமுன்னதாக பொதுமக்கள் கூறியதாவது:– சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி (டோல்கேட்) உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 15 ரூபாயும், வெளியூர் வாகனங்களுக்கு 70 ரூபாயும் சுங்க கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்க சுங்கச்சாவடி அருகே ஓமலூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்வதற்காக கோட்டகவுண்டம்பட்டி பகுதி வழியாக செல்கின்றனர்.
இந்த வழியானது குறுகலான ஒருவழிப்பாதையாகும். இந்த பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு கனரக வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக செல்லாமல் மாற்று வழியாக கோட்டகவுண்டம்பட்டிக்கு வருவதால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் நடக்கிறது. வாகனங்கள் இந்த வழியாக வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்கும் வரையில் ஊருக்குள் எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.