பெண்ணாடம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு


பெண்ணாடம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 Jun 2017 4:50 AM IST (Updated: 1 Jun 2017 4:50 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவருடைய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே அரியராவி கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 30) இவருடைய மனைவி அபிராமி (24). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் ஞானவேலுக்கும், அபிராமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த அபிராமி கணவருடன் கோபித்து கொண்டு துறையூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று தங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபிராமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அபிராமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு

இது குறித்து அபிராமியின் தாய் பூங்கோதை பெண்ணாடம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், எனது மகளிடம் வரதட்சணை கேட்டு ஞானவேல் தனது உறவினர்களுடன் சேர்ந்து துன்புறுத்தி வந்தார். இதனால் தான் அபிராமி தற்கொலை செய்து கொண்டார். எனவே எனது மகளுக்கு சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் சந்தேகத்தின் பேரில் போலீசார், ஞானவேல் மற்றும் அவருடைய உறவினர்கள் தனூஷ்கோடி, செந்தாமரை, சுதா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story