விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற பதிவறை எழுத்தருக்கு ஓராண்டு சிறை


விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற பதிவறை எழுத்தருக்கு ஓராண்டு சிறை
x
தினத்தந்தி 2 Jun 2017 4:00 AM IST (Updated: 2 Jun 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் விவசாயியிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற பதிவறை எழுத்தருக்கு ஓராண்டு சிறை தண்டனைவிதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடலூர்,

விருத்தாசலம் அருகே உள்ள சிறுபாக்கத்தை சேர்ந்தவர் செந்தாமரை(வயது 40) விவசாயி. இவரது குடும்ப சொத்து தொடர்பான வழக்கு விருத்தாசலம் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்காக சிட்டா, பட்டா, அடங்கல், வரைபடம் கேட்டு திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் கடந்த 5-12-2008 அன்று செந்தாமரை மனு கொடுத்தார். அப்போது அங்கு பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வந்த மஞ்சமுத்து என்பவர் குறிப்பிட்ட ஆவணங்களை வழங்குவதற்கு ரூ.1,500 லஞ்சம் கேட்டார்.

கையும், களவுமாக பிடிபட்டனர்

பணம் தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட செந்தாமரை இது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரின் அறிவுரையின் பேரில் செந்தாமரை திட்டக்குடி தாலுகா அலுவலகத்துக்கு சென்று பதிவறை எழுத்தர் மஞ்சமுத்துவிடம் ரூ.1,500 லஞ்சமாக கொடுத்தார்.

பணத்தை வாங்கிய அவர், தினக்கூலி அடிப்படையில் தனக்கு உதவியாளராக வேலை பார்த்து வந்த கொளஞ்சிநாதன் என்பவரிடம் கொடுத்து பணம் சரியாக இருக்கிறதா? என எண்ணிப்பார்க்கும்படி கூறினார். அப்போது அங்கே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மஞ்சமுத்துவையும், அவரது உதவியாளர் கொளஞ்சிநாதனையும் கையும் களவுமாக பிடித்தனர்.

ஓராண்டு சிறை

பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடலூர் சீப் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் கடந்த 19-12-2008 அன்று நடந்தது. நேற்றுமுன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட மஞ்சமுத்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவிச்சந்திரன் ஆஜரானார். மஞ்சமுத்து தற்போது பணி ஓய்வுபெற்று விட்டார். வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது கொளஞ்சிநாதன் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story