விழுப்புரம் அரசு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
விழுப்புரம் அரசு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை மாணவ– மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புகளான பி.ஏ., பி.எஸ்சி., பி.சி.ஏ. உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் கடந்த மாதம் 12–ந் தேதி தொடங்கி 25–ந் தேதி வரை நடைபெற்றது.
இதில் 8 ஆயிரத்து 100 மாணவ– மாணவிகள் விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். இவர்களில் 7 ஆயிரம் மாணவ–மாணவிகள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பித்தனர்.
மாணவ– மாணவிகள் பார்த்தனர்இதையடுத்து இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த பட்டியலை நேற்று கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அம்பலவாணன் வெளியிட்டார். இந்த பட்டியல் கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.
இதனை மாணவ– மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து தங்களது தரவரிசையை அறிந்துகொண்டனர். தொடர்ந்து, மாணவ– மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 5–ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது.