டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 Jun 2017 4:30 AM IST (Updated: 2 Jun 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் செம்மமடம் பகுதியில் டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் செம்மமடம் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செம்மமடம், ஆத்திக்காடு, ஒண்டி வீரன்நகர், சத்யாநகர், ராஜீவ்காந்திநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பெண்கள் திரண்டனர்.

பின்னர் தி.மு.க. நகர் செயலாளர் நாசர்கான், அவை தலைவர் ஏ.கே.என். சண்முகம், பொருளாளர் சுந்தர்ராஜன், தே.மு.தி.க. மாவட்ட பொருளாளர் திலீப்காந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சிஆர்.செந்தில்வேல், கருணாமூர்த்தி, கருணாகரன், சுடலைக்காசி, கம்யூனிஸ்டு கட்சி மகளிரணி நிர்வாகி வடகொரியா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகானந்தம், தமிழர் தேசிய முன்னணி கட்சியின் மாநில பொதுசெயலாளர் கண்.இளங்கோ, தமிழக வாழ்வுரிமை கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஜெரோன்குமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் செம்மமடம் கிராமத்தில் இருந்து கோஷமிட்டபடி தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

அங்கு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டபடி தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன்பின் அனைவரும் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தாரிடம் மனு கொடுத்து கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டம்

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- ராமேசுவரம் நகராட்சியின் 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள செம்மமடம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற காந்தாரி அம்மன் கோவில், அங்கன்வாடி மையம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் செம்மமடம் கிராமத்தையொட்டி ரெயில்வே தண்டவாளம் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடைகள் அமைத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்படும். இதனால் பொதுமக்கள் முழுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த கிராமம் வழியாக மதுக் கடைக்கு வருபவர்களால் பலவித பிரச்சினைகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும், பெண்களின் பாதுகாப்பு கருதி செம்மமடம் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு செம்மமடம், ஆத்திக்காடு, ஒண்டிவீரன் நகர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story