பருவமழை காலத்தில் வாகனங்கள் இயக்குவது குறித்த விழிப்புணர்வு கூட்டம்


பருவமழை காலத்தில் வாகனங்கள் இயக்குவது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:15 AM IST (Updated: 2 Jun 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை காலத்தில் வாகனங்கள் இயக்குவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது.

தர்மபுரி,

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்குவதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள், தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் இயக்க ஊர்தி ஆய்வாளர்கள், அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளின் மேலாளர்கள், தனியார் கல்லூரி வாகன பராமரிப்பு மேலாளர்கள், பொக்லைன் உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பருவ மழை காலத்தில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் சாலைகளில் வாகனங்களை இயக்கும் முறைகள் குறித்தும் வாகனங்களை இயக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு செயல்முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

வேகமாக இயக்க கூடாது

தனியார் பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களை மழைவெள்ளம் அதிகமாக ஏற்படும் பகுதிகளில் இயக்கக்கூடாது. மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மழை காலங்களில் அரசு போக்குவரத்து கழக வாகனங்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

ஆட்டோ டிரைவர்கள் மழை காலத்தில் சாலைகளில் வாகனங்களை வேகமாக இயக்க கூடாது. நிறுத்தம் இல்லாத இடங்களில் திடீரென ஆட்டோக்களை நிறுத்த கூடாது. மழை காலங்களில் பொக்லைன் எந்திர உரிமையாளர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தேவையான முன்னேற்பாட்டு வசதிகளுடன் தங்கள் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


Related Tags :
Next Story