பல்லடம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பொதுமக்கள்


பல்லடம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 Jun 2017 3:07 AM IST (Updated: 2 Jun 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறந்து வியாபாரம் நடைபெற்றது.

பல்லடம்,

பல்லடம் அருகே மாதப்பூரை அடுத்த சிங்கனூர் பிரிவு காட்டுப்பகுதியில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட இருப்பதாக அந்த பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த இடத்திற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் திரண்டு வந்து டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பல்லடம் தாசில்தார் சாந்தி, பொங்கலூர் நில வருவாய் ஆய்வாளர் சபரி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் ‘‘ இங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது’’ என்று கூறினர்.

பேச்சுவார்த்தை

பின்னர் சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் துரை, வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ‘‘அரசு உத்தரவுப்படி குடியிருப்பு, பள்ளிகள் இல்லாத காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது’’ என்று கூறினார். அப்போது பொதுமக்கள் ‘‘இங்கு திருட்டு மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடக்கிறது. பஸ்சுக்கு செல்ல வேண்டும் என்றால் டாஸ்மாக் கடை வழியாக நடந்து தான் வர வேண்டும், அதனால் இங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது’’ என்றனர். முடிவில் உங்கள் புகாரை மனுவாக எழுதி கொடுங்கள் என பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறிவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடையை திறக்க கூறினார்.

கடை திறப்பு

உடனே டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை திறந்து வியாபாரம் செய்தனர். டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சியை சார்ந்த ஒருவர் அதிகாரிகள் கடமையை செய்கிறார்கள். நாம் மேற்கொண்டு பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று தெரிவித்தார். இதை மற்றொரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நாம் இங்கேயே போராட்டம் நடத்தலாம் என்று கூற, போலீசார் அங்கிருந்தவர்களை கலைந்து போகச்செய்தனர். ஆனால் அவர்கள் ரோட்டில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தனர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story