எனக்கு பதவி உயர்வும் இல்லை, பதவி குறைப்பும் இல்லை
போலீஸ் மந்திரி பதவியை ராஜினாமா செய்த பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பெங்களூரு,
எனக்கு பதவி உயர்வும் இல்லை, பதவி குறைப்பும் இல்லை என்று பரமேஸ்வர் கூறினார்.
போலீஸ் மந்திரி பதவியை ராஜினாமா செய்த பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பதவிகளை பிரித்து கொடுக்கவில்லைநான் மந்திரி பதவியில் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் சட்டமன்ற தேர்தல் வருவதால் நான் கட்சிப் பணிகளில் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. சாதி அடிப்படையில் பதவிகளை பிரித்துக் கொடுக்கவில்லை. எங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை. ஒவ்வொருவருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும். காங்கிரஸ் எப்போதும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைத் தான் பின்பற்றுகிறது. அனைவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு பதவி உயர்வும் இல்லை, பதவி குறைப்பும் இல்லை. நான் அவ்வாறு கருதவில்லை.
நான் இன்னும் தலைவர் பதவியில் நீடிக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். கட்சி மேலிடம் என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அந்த பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளது. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இனிவரும் நாட்களில் ஆலோசித்து முடிவு எடுப்பேன். இது தொடர்பாக கட்சி மேலிடம் எனக்கு எந்த ஆலோசனையும் கூறவில்லை.
பெரிய சவாலாக எடுக்கிறோம்காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்றால் யார் முதல்–மந்திரி என்பது குறித்து இப்போது விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபற்றி கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும். கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரின் ஒரே குறிக்கோள். சட்டமன்ற தேர்தலை நாங்கள் பெரிய சவாலாக எடுக்கிறோம். இந்த தேர்தல் எங்களுக்கு மிக முக்கியமானது.
ஏனென்றால் நாட்டில் சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அதனால் எங்களுக்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது முக்கியமானது. நாங்கள் கடந்த 4 ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றி உள்ளோம். தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் எங்கள் அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்த பிறகே தேர்தல் வரும். ஆதிதிராவிடர் ஒருவர் முதல்–மந்திரி ஆக வேண்டும் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் குழப்பத்தை உருவாக்க வேண்டாம்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.