தீக்குளிப்பதாக கூறி உடலில் மண்எண்ணெய் ஊற்றியபோது தீப்பிடித்து பெண் பரிதாப சாவு
தீக்குளிப்பதாக கூறி உடலில் மண்எண்ணெய் ஊற்றியபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார். காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.
கணபதி,
கோவை ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்தவர் சட்டநாதன் (வயது 36). கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சட்டநாதன் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் திவ்யா, சட்டநாதனிடம் குடிப்பழக்கத்தை விட்டுவிடும் படி கூறிவந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் சட்டநாதன் வீட்டுக்கு மதுக்குடித்து விட்டு சென்றுள்ளார். இதனால் மீண்டும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குழந்தையை திவ்யா பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர், சமையலறையில் வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கணவரை மிரட்டினார்.
உடல் கருகி சாவுமேலும் அவர் தீக்குச்சியை பற்ற வைத்ததில் எதிர்பாராதவிதமாக தீ அவரது உடலில் பற்றியது. இதில் திவ்யாவின் உடல் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்தது. அவர் வலியால் அலறி துடித்தார். மனைவி உடலில் தீப்பற்றி எரிவதை பார்த்த சட்டநாதன் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் சட்டநாதனும் பலத்த தீக்காயம் அடைந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கணவன், மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைகாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் திவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சட்டநாதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திவ்யாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.