கூடலூரில் விவசாய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் வீடு, விவசாய நிலம் வழங்கக்கோரி வலியுறுத்தினர்


கூடலூரில் விவசாய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் வீடு, விவசாய நிலம் வழங்கக்கோரி வலியுறுத்தினர்
x
தினத்தந்தி 2 Jun 2017 3:48 AM IST (Updated: 2 Jun 2017 3:48 AM IST)
t-max-icont-min-icon

தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு, விவசாய நிலம் வழங்கக்கோரி கூடலூரில் விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் முடிவு செய்யப்படாத பிரிவு–17 மற்றும் 53 நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். மலைப்பகுதியில் பட்டா கொடுக்க தடையாக உள்ள அரசாணை 1168–ஐ ரத்து செய்ய வேண்டும். கூடலூர் தொகுதி மக்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் முடிவு செய்யப்படாத பிரிவு–17 நிலத்தில் விவசாயம் செய்து வரும் தேயிலை விவசாயிகளுக்கு தேயிலை வாரியத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து திட்டங்கள், சலுகைகளை வழங்கிட வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கு தரமான வீடு, விவசாய நிலம் வழங்க வேண்டும். நலிவுற்ற தேயிலை தோட்டங்களை மேம்படுத்திட வேண்டும். வன விலங்குகளிடம் இருந்து மக்களின் உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்க சரணாலய பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் பகல் 12½ மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் தங்கச்சன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஆலோசகர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். தமிழக நில உரிமை கூட்டமைப்பு தலைவர்கள் பெரியண்ணன், ரோகினிதேவி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், தொழிலாளர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதில் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், முனியாண்டி, செல்லையா, வீரய்யா, அம்பிகா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க செயலாளர் விஜயசிங்கம் நன்றி கூறினார்.

இது குறித்து தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜ் கூறியதாவது:–

50 ஆண்டுகளுக்கு மேலாக

கூடலூர் தொகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாமல் உள்ளது. 1990–ம் ஆண்டு மத்திய அரசு ஒரு உத்தரவிட்டுள்ளது. அதில் 1980–ம் ஆண்டுக்கு முன்பு வரை விவசாயம் செய்யும் நிலங்களுக்கு முறைப்படி பட்டா வழங்க வேண்டும் என கூறி உள்ளது. இதேபோல் 28 ஆண்டுகளுக்கு மேலாக பிரிவு–17, 53 நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வில்லை. எனவே மத்திய மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story