ஈரோடு அருகே பரபரப்பு மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி உறவினர்கள் சாலை மறியலில்


ஈரோடு அருகே பரபரப்பு மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி உறவினர்கள் சாலை மறியலில்
x
தினத்தந்தி 2 Jun 2017 5:00 AM IST (Updated: 2 Jun 2017 4:44 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள பெருமாள்மலை ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 44). இவர் அந்த பகுதியில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி வளர்மதி (34). இவர்களுக்கு மோகன பிரசாத் (7), சண்முக பிரியா (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இதில் மோகன பிரசாத் 2–ம்வகுப்பு முடித்துவிட்டு 3–ம் வகுப்பும், சண்முக பிரியா எல்.கே.ஜி. முடித்துவிட்டு முதலாம் வகுப்பும் செல்ல இருந்தனர்.

மோகன பிரசாத்துக்கும், சண்முக பிரியாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அடித்தது. அதனால் பேச்சிமுத்து 2 பேரையும் சிகிச்சைக்காக பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு டாக்டர்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

மர்ம காய்ச்சல்

அதனால் பேச்சிமுத்து தன்னுடைய 2 குழந்தைகளையும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கும் 2 பேருக்கும் காய்ச்சல் குறையவில்லை. அதனால் பேச்சிமுத்து தனது 2 குழந்தைகளையும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு டாக்டர்கள் மோகன பிரசாத்துக்கும், சண்முக பிரியாவுக்கும் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். அப்போது 2 பேருக்கும் மர்ம காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதனால் டாக்டர்கள் 2 பேரையும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

சாவு

இந்த நிலையில் சண்முக பிரியா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மோகன பிரசாத்துக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இறந்த சண்முக பிரியாவின் உடல் நேற்று காலை 8 மணி அளவில் ஈரோடு பெருமாள்மலை ராஜுவ்நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த சண்முக பிரியாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு –பவானி மெயின் ரோட்டில் காலை 8.40 மணி அளவில் ஒன்று கூடினார்கள்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பவானி மெயின் ரோட்டில் ‘திடீர்’ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுகாதார சீர்கேடு

அப்போது அதிகாரிகளிடம் அவர்கள் கூறியதாவது:–

எங்கள் பகுதியில் உள்ள சாக்கடை வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோடுகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, ஏராளமானோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எங்கள் பகுதியில் மாணவர் கார்த்தி மர்ம காய்ச்சலால் இறந்து விட்டார்.

தற்போது சண்முக பிரியாவும் மர்ம காய்ச்சலால் இறந்துள்ளார். மேலும் அவரது அண்ணனும் மர்ம காய்ச்சல் தாக்கி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாங்கள் மாவட்ட கலெக்டரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முகாம்

சுகாதார சீர்கேடு காரணமாகத்தான் மாணவர் கார்த்தி, சிறுமி சண்முக பிரியா ஆகியோர் இறந்துள்ளார். எனவே எங்கள் பகுதியில் உள்ள சாக்கடை வடிகாலை தூர்வாரி தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். தினமும் கொசுமருந்து அடிக்க வேண்டும். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்து, யாருக்கும் மர்ம காய்ச்சல் இல்லை என்று உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு அதிகாரிகள், ‘இங்கு சுகாதார வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவக்குழுவினர் இங்கு ஒரு வாரம் தங்கி முகாமிட்டு அனைவருக்கும் ரத்த மாதிரி பரிசோதனை செய்வார்கள். எனவே நீங்கள் போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்.’ என்றார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் காலை 9.20 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஈரோடு –பவானி மெயின் ரோட்டில் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story