நாராயணசாமியிடம், ரங்கசாமி நேரடி கேள்வி காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம்; வெளிநடப்பு
சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமியும், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியும் நேருக்குநேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
இந்த விவகாரத்தில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளி நடப்பு செய்தனர்.
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:–
மாணவர்கள் குழப்பம்அன்பழகன்:– புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பில் அரசு இடஒதுக்கீட்டில் சேருவதற்காக சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு 88 மாணவர்கள் சேர்க்கை ஆணை பெற்றனர். அதன்பின் கவர்னர் உத்தரவிட்டு ஒரு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அரசு நடத்திய கலந்தாய்வில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணமான ரூ.5½ லட்சத்தை செலுத்தி சேர சென்றபோது அவர்களை தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஏற்கவில்லை. ரூ.35 லட்சம் கட்டணம் செலுத்தினால்தான் சேர்க்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
அதேநேரத்தில் கவர்னரும் நான் மாணவர்களை அழைத்து சென்று சேர்க்கிறேன் என்று கல்லூரிகளுக்கு சென்று வந்தார். தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து என்.ஆர்.காங்கிரசார் வெளிநடப்பு செய்தனர். சுகுமாறன் எம்.எல்.ஏ.வும் வெளிநடப்பு செய்தார். தற்போது அரசு எத்தனை மாணவர்களை சேர்த்துள்ளது? கவர்னர் எத்தனை மாணவர்களை சேர்த்தார்? சில மாணவர்கள் ரூ.30 லட்சம் கொடுத்து சேர்ந்ததாகவும் செய்திகள் வருகிறது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது? இந்த விவகாரத்தில் எது உண்மை? எது பொய் என்பதை இந்த அரசு விளக்கவேண்டும்.
ரங்கசாமி குற்றச்சாட்டுலட்சுமிநாராயணன் (காங்):– சென்டாக் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் நமது அரசு செய்தது என்ன? சென்டாக்கில் என்ன பிரச்சினை? அரசு இடஒதுக்கீட்டை தனியாருக்கு கொடுத்ததாக புகார்கள் கூறப்பட்டுள்ளன? இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி கலந்தாய்வு நடந்ததா? கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்க தனியார் மருத்துவக் கல்லூரிகள் மறுத்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களை கவர்னர் அழைத்து சென்றதாகவும் செய்திகள் வந்துள்ளன. உண்மை நிலையை அரசு விளக்கவேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி:– மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கவர்னர் சென்டாக் அலுவலகத்துக்கு சென்று மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
முதல்–அமைச்சர் நாராயணசாமி:– முறைகேடு என்று யார் சொன்னது?
ரங்கசாமி:– பத்திரிகைகளில்தான் செய்தி வந்துள்ளது.
தனியாருக்கு போனது எப்படி?ரங்கசாமியின் கருத்துக்கு அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரங்கசாமி:– எப்படி 71 இடம் தனியாருக்கு போனது. அதை எப்படி கவர்னர் மீண்டும் பெற்றார்? அந்த இடங்கள் தனியாருக்கு சென்றது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
கந்தசாமி:– கவர்னர் ரோட்டுக்கு சென்றதை ஏற்க முடியாது.
ரங்கசாமி:– கவர்னர் எனக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுகிறார். இதில் என்னதான் நடந்தது?
எம்.என்.ஆர்.பாலன் (காங்):– கவர்னர் விளம்பரத்துக்காக சென்றுள்ளார். ஆனால் அவர் சென்றும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
ரங்கசாமி:– சென்டாக்கில் என்னதான் நடந்தது? என்ன ஆட்சி இது?
தொடர்ந்து ரங்கசாமிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
வாசலில் சென்று நிற்பதா?எம்.என்.ஆர்.பாலன்:– கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கல்லூரி நிர்வாகிகளை அழைத்து பேசி இருக்கவேண்டும். அதைவிடுத்து தனியார் மருத்துவக்கல்லூரி வாசலில் சென்று நிற்பதா?
வையாபுரி மணிகண்டன்:– அரசு செய்ய தவறியதை கவர்னர் செய்கிறார்?
அமைச்சர் நமச்சிவாயம்:– என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் ஒரு இடமாவது பெற்றதுண்டா? நீங்கள் ஏன் வாங்கவில்லை.
அன்பழகன்:– ஆளாளுக்கு பேசுகிறீர்கள்? இது சட்டமன்றமா? மீன் மார்க்கெட்டா?
சபாநாயகர் வைத்திலிங்கம்:– முதல்–அமைச்சரை பதில் சொல்ல விடுங்கள்.
நமச்சிவாயம்:– பதில் அவர்களுக்கு தேவையில்லை. வெளிநடப்பு செய்து அது பேப்பரில் செய்தியாக வெளிவர வேண்டும். அதுதான் அவர்கள் எண்ணம்.
மைக் துண்டிப்புதொடர்ந்து காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் முதல்–அமைச்சர் தவிர மற்ற அனைவரின் மைக் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார்.
தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான என்.எஸ்.ஜே.ஜெயபால், அசோக் ஆனந்து, சுகுமாறன், கோபிகா, சந்திரபிரியங்கா ஆகியோரும் வெளியேறினார்கள்.
முதல்–அமைச்சர் நாராயணசாமி:– கலந்தாய்வு தொடர்பாக நான் நேற்றே விளக்கம் அளித்துள்ளேன். நாங்கள் மத்திய சுகாதாரத்துறை, அகில இந்திய மருத்துவ கவுன்சில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுத்தோம். கடந்த 29, 30–ந்தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கல்லூரிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை.
இதற்காக ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் தலைமையில் கட்டணக்குழு உள்ளது. அந்த குழுவுக்கு உத்தரவிடும் அதிகாரமும் நமக்கு இல்லை. இருந்தபோதிலும் கட்டணக்குழு தலைவரிடம் கட்டணத்தை நிர்ணயிக்குமாறு கேட்டு கடிதம் எழுதினோம். அவரும் தமிழகத்தைப் போன்று ரூ.3½ லட்சத்தை கட்டணமாக அறிவித்தார். ஆனால் அதற்கு தனியார் மருத்துவக்கல்லூரிகள் 3 பேர் கொண்ட கட்டணகுழுவில் ஒருவர் மட்டும் தன்னிச்சையாக கட்டணத்தை அறிவித்துள்ளார் என்று கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளன. அதன்பின் 3 பேர் கொண்ட குழு கூடி ரூ.5.50 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்தது.
கவர்னர் சேர்த்தாரா?சபாநாயகர் வைத்திலிங்கம்:– தனியார் மருத்துவக்கல்லுரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனரா?
நாராயணசாமி:– கலந்தாய்வு மூலம் 101 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று 26 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நானும், அமைச்சர்களும் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகளை அழைத்து பேசினோம். அப்போது மாணவர்களை சேர்த்துக்கொள்வதாக கூறி விட்டு பின்னர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக 2–ந்தேதிக்குள் (இன்று) விளக்கம் அளிக்க அவர்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளோம்.
சபாநாயகர் வைத்திலிங்கம்:– கவர்னர் தலையிட்டு மாணவர்களை சேர்த்தாரா?
நாராயணசாமி:– கடந்த காலங்களில் நடந்த கலந்தாய்வினை ரத்துசெய்வதாக கவர்னர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அதுதொடர்பாக பேசினால் கவர்னரை விமர்சிப்பதுபோல் இருக்கும். எனவே அதை பேச விரும்பவில்லை.
அ.தி.மு.க. வெளிநடப்புஅன்பழகன்:– கலந்தாய்வுக்கு முன்பே ஏன் கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை?
அமைச்சர் கமலக்கண்ணன்:– கட்டணக்குழுவின் முடிவில் நாம் தலையிட முடியாது. அதற்கென தனி அரசாணை உள்ளது. அது தெரியாமல் எதிர்க்கட்சியினர் பேசக்கூடாது.
தொடர்ந்து அன்பழகன் எழுந்து பேச முயன்றார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதை கண்டித்து அவர் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் வெளியேறினார்கள்.
கல்லூரிகளுக்கு நோட்டீசுநாராயணசாமி:– அரசு உத்தரவினை மதிக்காமல் மாணவர்களை சேர்க்க மறுத்ததால் அந்த கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தடையில்லா சான்றிதழை ஏன் ரத்துசெய்யக்கூடாது? என்று சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரை விட எங்களுக்கு மாணவர்கள் மேல் அதிக அக்கறை உள்ளது. கடந்த வருடம் ஒரு இடம்கூட வாங்காமல் இங்கு வந்து பேசுகிறார்கள். சென்டாக்கில் கவர்னர் உறுப்பினர் கிடையாது. அவரது நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். நமது நடவடிக்கையில் எந்தவித தவறும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியும் தெரிவித்தார். சென்டாக் கலந்தாய்வில் எந்த தவறும் நடக்கக்கூடாது. எனவே பத்திரிகைகளை பார்த்துவிட்டு பேசக்கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மருத்துவ மாணவர்கள் சேர்க்கை: அதிகாரபூர்வ விவரங்கள் கிடைக்கவில்லை நாராயணசாமி பதில்சபாநாயகர் வைத்திலிங்கம்:– இதுவரை எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர்?
நாராயணசாமி:– போன் மூலம் எனக்கு கிடைத்த தகவல்படி 8 பேர் சேர்ந்ததாக கூறினார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து இதுவரை அதுதொடர்பாக அதிகாரபூர்வ விவரங்கள் வரவில்லை. அது வந்தததும் முழு விவரங்களையும் அவையில் சொல்கிறேன்.
(அப்போது அன்பழகன் எம்.எல்.ஏ. சபைக்குள் வந்து துணை சபாநாயகர் இருக்கை அருகே சென்று அங்கிருந்தபடி மைக்கில் பேச முயன்றார். அவரது இருக்கைக்கு செல்லக்கூறிய சபாநாயகர் வைத்திலிங்கம் அவருக்கு மைக் இணைப்பு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.)
அன்பாகன்:– 101 பேரை சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையில் கவர்னர் எடுத்த நடவடிக்கை மூலம் தேர்வான 26 பேரை அரசு ஏற்கிறதா? 8 பேர் சேர்த்ததாக கூறுகிறீர்கள். மற்றவர்களை சேர்ப்பது யார் பொறுப்பு?
நாராயணசாமி:– சேர்க்கை விவரங்களை நாளை (இன்று) அவையில் சமர்ப்பிக்கிறேன். கட்டணக்குழு நிர்ணயித்த ரூ.5½ லட்சம் கட்டணத்தை தருவதுதான் எங்கள் அரசின் நிலை.