வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, பிழைகளை நீக்க சிறப்பு பணி கலெக்டர் சம்பத் தகவல்
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, பிழைகளை நீக்க ஜூலை மாதம் சிறப்பு பணி தொடங்குவதாக கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.
சேலம்,
தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் வகையில் வருகிற ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை சிறப்பு பணி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கேற்ப அதிகளவில் வாக்காளர்களை, குறிப்பாக 18, 19 வயதுடையவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தொடர் திருத்த காலத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
ஜூலை 31–ந் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு பணியின் போது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் படிவங்களை சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், இ–சேவை மையங்களின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இறந்த வாக்காளர்கள்மேலும் ஜூலை மாதம் 9 மற்றும் 23–ந் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவார்கள். இந்த சிறப்பு பணியின் போது இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியும் நடைபெற உள்ளது.
இறப்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களில் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து சிறப்பு பணியின் போது நீக்கப்படும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.