பாவூர்சத்திரம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்


பாவூர்சத்திரம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2017 2:30 AM IST (Updated: 2 Jun 2017 6:40 PM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் மதுபாட்டிலுக்கு தாலி கயிறு அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் மதுபாட்டிலுக்கு தாலி கயிறு அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடைகள்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடத்தில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் குடியிருப்பு பகுதிகளில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதால் பெரும்பாலான இடங்களில் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடைகளை மூடி உத்தரவிட்டது. ஆனாலும் சில இடங்களில் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் இருந்து ஆவுடையானூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இக்கடையை அப்பகுதியில் இருந்து அகற்றக்கோரி கடந்த ஜனவரி மற்றும் மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றினர். பஸ் மறியல், கடை முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களையும் பொது மக்கள் நடத்தினர், ஆனால் இதுவரை அந்த டாஸ்மாக் கடை மூடப்படவில்லை. தற்போது பாவூர்சத்திரம் சுற்று பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டு விட்டதால் இந்த கடைக்கு மது குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது.

இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அந்த பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவ– மாணவிகள் மற்றும் அருகில் உள்ள பீடிக்கடைக்கு வரும் பெண்களும், அத்துடன் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு வருபவர்களும் பெரும் சிறமத்திற்கு ஆளாகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது பிரச்சினைகள் எழுகின்றன.

ஒப்பாரி வைத்து போராட்டம்

எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி திப்பணம்பட்டி, கொண்டலூர், பூவனூர், மலையராமபுரம், போன்ற சுற்று பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அருகில் பந்தல் அமைத்தும், சமையல் செய்து சாப்பிட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது. நேற்றைய போராட்டத்தின் போது பெண்கள் மதுபாட்டில்களுக்கு தாலிக்கயிறு அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டம் நடத்தினர்.

மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் குடியிருப்பு பகுதி அருகில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையை, பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இந்த கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என வலியுறுத்தி தென்காசி உதவி கலெக்டர் மற்றும் தென்காசி தாசில்தாருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Next Story