கூடலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு


கூடலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Jun 2017 4:30 AM IST (Updated: 3 Jun 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு தொழிலாளர்கள், விவசாயிகள் குறைகளை தெரிவித்தனர்

கூடலூர்,

கூடலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம், தொழிற்சாலை தொழிலாளர்கள், தேயிலை விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு

கூடலூர் 2–வது மைல் பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் நேற்று பகல் 2½ மணிக்கு தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு செய்தார். அப்போது அவர், தொழிற்சாலையில் பச்சை தேயிலைகளை அரைத்து தேயிலை தூள் தயாரிக்கும் எந்திரங்களை பார்வையிட்டார். பின்னர் தேயிலை உற்பத்தி செய்யும் முறைகளை கேட்டறிந்தார். மேலும் வணிக ரீதியாக தேயிலை தூள்களை விற்பது குறித்து தொழிற்சாலை அலுவலர்களுடன் ஆலோசித்தார்.

அப்போது தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே இன்றைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு சம்பள உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இது குறித்து, கூட்டுறவு தொழிற்சாலை அலுவலர்களிடம் ஆலோசிக்கப்படும். பின்னர் முதல்– அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

அமைச்சரிடம் விவசாயிகள் புகார்

இதேபோல் கூட்டுறவு தொழிற்சாலையில் உறுப்பினர்களாக உள்ள சிறு தேயிலை விவசாயிகள் அமைச்சர் பெஞ்சமினிடம் புகார் மனு கொடுத்தனர். அதில், தொழிற்சாலையில் பதிவு செய்துள்ள சிறு விவசாயிகளிடம் இருந்து மட்டுமே பச்சை தேயிலை கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி தனியார் தோட்டங்களில் இருந்து பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தரம் இல்லாத தேயிலை தூள் தயாரிக்கப்படுகிறது. மேலும் தேயிலை விலையும் குறைந்து வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி இருந்தனர்.

மனுவை பெற்ற அமைச்சர் பெஞ்சமின் உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பெஞ்சமின் கூறுகையில், கூடலூர் பகுதி விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். மேலும் கூடலூரில் கூடுதலாக கூட்டுறவு தொழிற்சாலை தொடங்க பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் மணிவண்ணன், ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனூப்கான் உள்பட கட்சியினர் உடன் இருந்தனர்.


Next Story