வாரியங்காவல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வாரியங்காவல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராம தேவனூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கடை அகற்றப்பட்டது. பின்னர் அந்த டாஸ்மாக் கடை வாரியங்காவல் – நாகல்குழி செல்லும் சாலையில் அவசர அவசரமாக இரவோடு இரவாக திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் வாரியங்காவல் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
சாலை மறியல்இந்நிலையில் வாரியங்காவல் – தேவனூர் செல்லும் சாலையில் ½ கி.மீ. தூரத்தில் புதிய டாஸ்மாக் கடை மீண்டும் அதிகாரிகளால் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதையறிந்த தேவனூர், கல்வெட்டு, குளத்தூர், காட்டாத்தூர், வல்லம், நாகல்குழி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி வாரியங்காவல் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி, சந்திரலேகா, சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்லமுத்து, செல்வக்குமாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுக்கும் படி கூறினர்.
பேச்சுவார்த்தைஇதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:–
டாஸ்மாக் கடை எங்கள் பகுதிக்கு வேண்டாம். இங்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அரசு பள்ளிக்கு மாணவிகள் மிதி வண்டிகளில் சென்று மாலை வீடு திரும்பும் போது மிகுந்த பயத்துடன் செல்கின்றனர். மேலும் தேவனூர் கிராமங்களுக்கு பஸ் வசதி அடிக்கடி இல்லாததால் பெரும்பாலான பெண்கள் நடந்து செல்ல வேண்டியிருக்கின்றது. மேலும் சாலையில் இருபுறமும் முந்திரி காடு, தைல மரக்காடுகள் உள்ளதால் எங்களுக்கு பாதுகாப்பில்லை. ஆகவே தேவனூர் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். தகவல் அறிந்த ஆண்டிமடம் தாசில்தார் ராஜமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் டாஸ்மாக் கடை எங்களுக்கு வேண்டும் என்றும், கடையை திறக்க வேண்டும் என்றும் கூறி டாஸ்மார்க் கடை முன்பு 50–க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகள் கடையை திறக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.