விருதுநகர் அருகே இன்ஸ்பெக்டரின் கையை கடித்த சகோதரர்கள் கைது


விருதுநகர் அருகே இன்ஸ்பெக்டரின் கையை கடித்த சகோதரர்கள் கைது
x
தினத்தந்தி 3 Jun 2017 4:30 AM IST (Updated: 3 Jun 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே கோவில் பூசாரிகளை தாக்கியவர்களை கண்டித்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டரின் கையை கடித்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள ஆவடையாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 50). இவர் அங்குள்ள காளியம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். இவரது மகள் மீனாவை மதுரையை சேர்ந்த காளிதாஸ் (25) என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின்பு மீனாவுக்கும் பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளது.

தாக்க முயற்சி

இந்த நிலையில் ஆவடையாபுரத்தில் காளியம்மன்கோவில் பொங்கல் விழாவுக்கு காளிதாஸ் தனது சகோதரர் ராஜேந்திரபிரசாத் (29) என்பவருடன் வந்திருந்தார். சகோதரர்கள் இருவரும் கோவிலுக்கு சென்ற போது அங்கிருந்த பூசாமி பாலமுருகன் இவர்கள் இருவருக்கும் விபூதி கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் பூசாரி பாலமுருகன் கரகம் எடுத்து ஊர்வலமாக வந்த போது அவர் மீது பாட்டிலை வீசி தாக்க முயன்றனர். பாலமுருகன் விலகி கொண்டதால் அவருக்கு காயம் ஏற்படவில்லை. இது குறித்து அவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வச்சக்காரப்பட்டி சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் புகார் தெரிவித்தார்.

கடித்தனர்

சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன் உடனே சகோதரர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் சப்–இன்ஸ்பெக்டர் முருகேசனின் கையை கடித்துவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பாலமுருகன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து காளிதாஸ், ராஜேந்திரபிரசாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Next Story