பொதுமக்கள் சூறையாடிய பெரியவலசு டாஸ்மாக் கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


பொதுமக்கள் சூறையாடிய பெரியவலசு டாஸ்மாக் கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
x
தினத்தந்தி 3 Jun 2017 3:45 AM IST (Updated: 3 Jun 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் சூறையாடிய பெரியவலசு டாஸ்மாக் கடையில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் செயல்பட்டு வந்த ஏராளமான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மற்ற கடைகளில் குடிமகன்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதன்படி ஈரோடு பெரியவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கும் ஏராளமான குடிமகன்கள் தினந்தோறும் வந்து குடித்துவிட்டு செல்கிறார்கள். சிலர் மதுபோதையில் விழுந்து கிடப்பதால் பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடியவில்லை. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பெரியவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முதலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூறையாடினர்...

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் இன்னும் ஒருசில நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக பொதுமக்களிடம் உத்தரவாதம் அளித்தனர்.

எனினும் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கடந்த மாதம் 16–ந் தேதி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இதையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

கண்காணிப்பு கேமரா

இந்த நிலையில் கடந்த மாதம் 29–ந் தேதி பெரியவலசு டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது டாஸ்மாக் கடையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கடையின் முன் பகுதியில் ஒரு கண்காணிப்பு கேமராவும், பார் செயல்படும் பகுதியில் ஒரு கண்காணிப்பு கேமராவும் என 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இனி டாஸ்மாக் கடையில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், கேமராவில் பதிவாகி இருக்கும் பதிவுகளை திரும்ப போட்டு பார்த்து யார் காரணம்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.


Next Story