நம்பியூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்ட இடம் தேர்வு


நம்பியூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்ட இடம் தேர்வு
x
தினத்தந்தி 3 Jun 2017 4:00 AM IST (Updated: 3 Jun 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூரில் ரூ.1½ கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் எஸ்.பிரபாகர் ஆய்வு செய்தார்.

நம்பியூர்,

தமிழ்நாட்டில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் வேளாண்மைத்துறை சார்பில் கிடங்குகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. மேலும், பவானிசாகர், பவானி, சென்னிமலை ஆகிய இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்காக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுவதற்காக மலையப்பாளையம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர், வேளாண்மைத்துறை கட்டிடம் மட்டுமின்றி புதிதாக அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கான இடத்தையும் அளவீடு செய்து பரிந்துரை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி, வேளாண்மை அதிகாரி ஜீவதயாளன், துணை தாசில்தார் (பொறுப்பு) உத்திரசாமி, வருவாய் ஆய்வாளர் கற்பகம் ஆகியோர் உடனிருந்தனர்.

ரூ.1½ கோடி

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், விதைச்சான்று, வேளாண்மை வணிகம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து அலுவலகங்களும் நம்பியூரில் ஒரே இடத்தில் அமையும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டிடம் ரூ.1½ கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இதில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், மருந்துகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களை இருப்பு வைக்க பிரம்மாண்ட கிடங்குகளும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க தனி அரங்கமும் கட்டப்படும்’’, என்றனர்.


Next Story