வடமதுரை அருகே விபத்து: பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதல்
வடமதுரை அருகே பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடமதுரை,
திருவண்ணாமலையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை திருவண்ணாமலையை சேர்ந்த ஏகாம்பரம் (வயது 23) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி– திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை பிரிவில் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது லாரியின் டயர் திடீரென பஞ்சரானது. இதையடுத்து டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டார். அந்த வேளையில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மற்றோரு லாரி வந்து கொண்டிருந்தது. திருச்சி மணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவர் அந்த லாரியை ஓட்டினார்.
போக்குவரத்து பாதிப்புவேல்வார்கோட்டை பிரிவு பகுதியில் வந்தபோது, பழுதாகி கண்டெய்னர் லாரியின் மீது, பாலகுமார் ஓட்டி வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் 2 லாரிகளும் பலத்த சேதம் அடைந்தன. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கன்டெய்னர் லாரியில் இருந்த கோந்து பொருட்கள் சாலையில் சிதறின. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 லாரிகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.