செங்குன்றம் அருகே பள்ளி மாணவியை கடத்திய ரவுடி கைது
செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை, கடந்த மாதம் 3–ந்தேதி அதே பகுதியை சேர்ந்த ரவுடி முனிபாபு(வயது 28) என்பவர் கடத்திச் சென்று விட்டார்.
செங்குன்றம்,
இது குறித்த புகாரின்பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், ரவுடி முனிபாபுவையும் தேடி வந்தனர்.
இதற்கிடையில் மாணவியை தேடுவதில் போலீசாருக்கு உதவியாக இருந்ததாக உப்பரபாளையத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சந்திரன் மீது ஆத்திரம் அடைந்த முனிபாபு, தனது நண்பரான ரவுடி வெள்ளை என்பவருடன் கடந்த மாதம் 18–ந்தேதி சந்திரன் வீட்டுக்கு சென்றார்.
அங்கு அவர் இல்லாததால் வீட்டின் வெளியே நின்ற சந்திரனின் மனைவி பாரதி(35), மாமியார் ஆதியம்மாள் (55), அண்ணன் மகள் மலர்விழி (30) மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த வேலு (22) ஆகிய 4 பேரை கத்தியால் வெட்டினர். பின்னர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த காரையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு டிமிக்கு கொடுத்து வந்த ரவுடி முனிபாபுவை நேற்று சத்தியவேடு அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கடத்திச் சென்ற பள்ளி மாணவியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிபாபுவிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.