தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது
தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக்கடைகள் திறக்கப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
தாராபுரம்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கார்ல் மார்க்ஸ் ஆண்டு விழா பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாலுகா செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் காளியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசியதாவது:–
மக்கள் இருக்கும் வரை மார்க்சியம் என்ற மகத்தான தத்துவம் இருந்து கொண்டே இருக்கும். அது ஒருநாள் நிச்சயம் வெற்றி பெரும். பிரதமர் மோடி தேர்தல் முன்பு வாக்குறுதி கொடுத்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வந்த நூறுநாளில் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, இங்குள்ள இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவோம் என்றார். வாக்குறுதி அளித்தபடி தந்தார்களா என்றால் இதுவரை தரவில்லை.
விலைவாசிவிலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. விலைவாசியை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி கூறினார். வேலையும் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக நாட்டில் வேலையின்மைதான் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்களை திசைதிருப்பக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் மாடுகளை இறைச்சிக்காக விற்க கூடாது என்று அறிவித்திருக்கிறார். இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல மாநில முதல்–மந்திரிகள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து தமிழக முதல்–அமைச்சர் எடைப்பாடி பழனிசாமியிடம் கேட்டால், இந்த அறிக்கையை இன்னும் நான் படிக்கவில்லை என்று கூறுகிறார்.
டாஸ்மாக் கடைகள் திறப்புதமிழகத்தின் உரிமைகள் எல்லாம் தற்போது பறிபோகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறார்கள். தமிழகம் வறட்சியால் சிக்கித் தவிக்கிறது. வறட்சி நிவாரணமாக ரூ.39 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்கிறது. மத்திய அரசு தரவில்லை. வர்தாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.22 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.17 ஆயிரம் கோடியை தமிழக அரசு செலவழித்திருக்கிறது. அதையாவது கொடுங்கள் என்று மத்திய அரசை கேட்டால் அதுவும் வழங்கப்படவில்லை.
இந்தி வழுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. அதை எதிர்த்து ஆளுகின்ற அ.தி.மு.க. அரசு குரல்கொடுக்கவில்லை. டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு தற்போது தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. முதல்–அமைச்சர் எடைப்பாடி பழனிசாமி பதவியை தக்கவைப்பதில் கவனத்தைச் செலுத்தி வருகிறார். முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மோடி தயவில் எப்படி முதல்–அமைச்சர் ஆவது என்று சிந்தித்து கொண்டிருக்கிறார்.
வராக்கடன்மக்களைப் பற்றியோ, விவசாயிகளைப்பற்றியோ முதல் அமைச்சருக்கு கவலையில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாத மத்திய அரசு, கார்ப்ரேட் முதலாளிகளுக்கு நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகளிலிருந்து 13 லட்சம் கோடியை கடனாக கொடுத்துவிட்டு வசூலிக்கவில்லை. அதை தற்போது வராக்கடன் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். இந்த தேசம் குரங்குகளிடம் அகப்பட்டுக் கொண்டுவிட்டது. இந்த தேசத்தை காப்பாற்ற வேண்டும். அதைமீட்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.