கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்


கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:30 AM IST (Updated: 3 Jun 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்குவது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பொள்ளாச்சி சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகருபண்ணசாமி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுகுமார், கிணத்துக்கடவு தாசில்தார் பொன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி மோகன்தம்பி வரவேற்று பேசினார்.

இதில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

அதிகாரிகள் புகார்

கூட்டத்தில் பொதுமக்கள் கூறும்போது, பெரும்பாலான கிராமங்களில் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், சில பகுதிகளில் மின்விளக்கு எரிவதில்லை. கடந்த 6 மாதமாக கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிக்கு அம்பராம்பாளையம் குடிநீர் வரவில்லை. கிராமங்களுக்கு குடிநீர் குறைவாக வினியோகம் செய்யப்படுகிறது. சில பகுதிகளில் முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வைத்துள்ளதை துண்டிக்க வேண்டும். மின்சார ஊழியர்கள் சரிவர பணி செய்வதில்லை, என்றனர். இதையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:–

குடிநீர் கிடைக்க நடவடிக்கை

அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக குடிநீர் கிடைக்க முதலில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி விரைவில் உரிய தீர்வு காணப்படும். அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு அம்பராம்பாளையம் குடிநீர் கிடைக்க குழாய் பதித்து தண்ணீர் வழங்கப்படும். நான்கு வழிப்பாதை அமையும் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மூடப்பட உள்ளதால் அதற்கு மாற்று பகுதியை கண்டுபிடித்து அந்த பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

புகார் தெரிவிக்கலாம்

அதேபோல் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அனுமதியின்றி கிராம பகுதியில் உள்ள குடிநீர் வால்வுகளை திறந்தால் அதிகாரிகள், போலீசில் புகார் செய்யலாம். கிராமங்களில் முறைகேடாக அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் குடிநீர் குழாய்களை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு அதனை துண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மந்திரவேலு, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ஏகநாத மூர்த்தி, அ.தி.மு.க. பேரூராட்சி துணை செயலாளர் டி.எல்.சிங் உள்பட பலர்கலந்து கொண்டனர்.


Next Story