கக்கடவில் தரைபாலத்தை சீரமைக்க கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கக்கடவில் தரைபாலத்தை சீரமைக்க கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Jun 2017 4:00 AM IST (Updated: 3 Jun 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

கக்கடவில் தரைபாலத்தை சீரமைக்க கோரி பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சி,

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கக்கடவில் தரைபாலம் இடிந்து 1½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் சரிசெய்யப்படவில்லை. மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் கிழக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு அவர்கள் பொள்ளாச்சி சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சியாமளாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தரைபாலத்தை சீரமைக்க வேண்டும்

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கக்கடவில் ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு அருகில் தரைபாலம் உள்ளது. இந்த தரைபாலத்தை தாண்டி சுடுகாடும் உள்ளது. தரைபாலம் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்து விட்டது. தற்போது மிகப்பெரிய பள்ளமாக உள்ளது. இதில் 2 குழந்தைகள் விழுந்து காயமடைந்து உள்ளனர்.

இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியவில்லை. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லையால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே இதுகறித்து உரிய நடவடிக்கை எடுத்து தரைபாலத்தை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story