போலீஸ்காரரை இரும்புகம்பியால் தாக்கிய வாலிபர் கைது


போலீஸ்காரரை இரும்புகம்பியால் தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2017 3:45 AM IST (Updated: 3 Jun 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போலீஸ் காரரை இரும்புகம்பியால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் ரோந்து போலீஸ்காரராக பணியாற்றுபவர் பிரவீண். இவர் கடந்த 31-ந்தேதி இரவு சூளைமேடு, நமச்சிவாயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தார். விசாரணையின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென போலீஸ்காரர் பிரவீணை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

வாலிபர் கைது

தலையில் பலத்த காயம் அடைந்த பிரவீண், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீஸ்காரர் பிரவீணை தாக்கியதாக குரோம்பேட்டையை சேர்ந்த பாலாஜி (வயது 22) என்ற வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

மளிகைக்கடையில் திருட்டு

* அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் மண்எண்ணெய் விளக்கு கவிழ்ந்து தீப்பிடித்ததில், படுகாயம் அடைந்த கவுசல்யா (21) சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார்.

* மீனம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே காலி மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மரக்கழிவுகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

* ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பெயிண்டர் இளையராஜா (24) வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

* ஆதம்பாக்கம் கக்கன்நகரில் சித்திரை என்பவரது மளிகை கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.40 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.

மின் ஊழியர் பலி

* ராயபுரத்தில் தீனதயாளன் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடிய சஞ்சய்குமார் (19), ஜெபான் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

* மதுரவாயலில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பிலவேந்தன் (38) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

* வானகரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த சஞ்சித் (40) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து
புகையிலைபொருட்களும், 10 ஆயிரத்து 700 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

* தரமணியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த மின் ஊழியர் தங்கராஜ் (54), சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

* கொரட்டூரில் லோக நாதன் என்பவர் நடத்தும் பழைய கார் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்து, 7 ஆயிரம் ரூபாயை திருடியதாக முன்னாள் ஊழியர் அரிநாதன் (22) நேற்று கைது செய்யப்பட்டார்.

* ஆர்.கே.நகரில் ஒரு நம்பர் லாட்டரி விற்றதாக ஸ்ரீராம் (42), வடிவேலு (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 8 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

Next Story