சென்டாக் சேர்க்கை விவகாரத்தில் தீயசக்திகள் மாணவர்களை திசை திருப்புகின்றன
சென்டாக் சேர்க்கை விவகாரத்தில் தீயசக்திகள் மாணவர்களை திசை திருப்புகின்றன சட்டசபையில், நாராயணசாமி ஆவேசம்
புதுச்சேரி,
சென்டாக் சேர்க்கை விவகாரத்தில் மாணவர்களை தீயசக்திகள் திசை திருப்புகின்றன என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
சென்டாக் விவகாரம்சென்டாக் கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினார்கள். இந்த விஷயத்தில் கவர்னர் கிரண்பெடி மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முழு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
அதன்படி எம்.எல்.ஏ.க்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சட்டசபையில் நேற்று நாராயணசாமி அறிக்கை ஒன்றை படித்தார். அப்போது கூறியதாவது:–
தனி ஒதுக்கீடுகடந்த ஆண்டுகளில் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புக்கு புதுச்சேரி மாணவர்களுக்கென தனியாக இடஒதுக்கீடு கிடையாது. எங்களுடைய தொடர்ச்சியான விடாமுயற்சியால் மத்திய அரசிடம் இருந்து இந்த ஆண்டு புதுச்சேரி மாணவர்களுக்கென தனி ஒதுக்கீடு பெறப்பட்டது.
புதுவையில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 318 முதுநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. 50 சதவீத இடஒதுக்கீட்டின்படி புதுச்சேரி மாணவர்களுக்கென்று 162 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 162 இடங்களுக்கு புதுச்சேரி அரசு வெளிப்படையான திறந்த நிர்வாக முறையில் ஆன்லைன் மூலம் புதுச்சேரி மாணவர்களிடம் இருந்து 267 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அனைத்து மாணவர்களும் முதல் மற்றும் 2–ம்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.
தனியாருக்கு வழங்கவில்லைமாணவர்களின் நீட் மதிப்பெண் அடிப்படையிலும், விருப்பப்பாட அடிப்படையிலும் புதுச்சேரிக்கான 161 இடங்களில் 91 இடங்கள் நிரப்பப்பட்டன. 2 கட்ட கலந்தாய்வு முடிந்தபின் மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலின்படி இறுதிகட்ட கலந்தாய்வில் நிரம்பாத 71 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சென்றது. ஆனால் தனியாருக்கு அந்த இடத்தை வழங்கவில்லை. ஒரு இடம்கூட காலியாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடுதான் மத்திய அரசு இந்த உத்தரவை போட்டது.
இந்தநிலையில் நீட் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டது. இதன் வாயிலாக மேலும் 10 புதுச்சேரி மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு இடங்கள் கிடைத்தன. எனவே புதுச்சேரிக்கான மொத்த ஒதுக்கீடான 162 இடங்களில் 101 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைத்தது. மருத்துவ பட்டப்படிப்பு கட்டணத்தை பொறுத்தவரை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதியின் தலைமையிலான கட்டணக்குழு அரசாங்க ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.3 லட்சம் எனவும், தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.13 லட்சம் எனவும் கட்டணத்தை நிர்ணயித்தது.
ஐகோர்ட்டில் வழக்குகட்டணக்குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அமர்ந்து கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை என்று தனியார் மருத்துவ கல்லூரிகள் சென்னை ஐகோர்ட்டில் கட்டணக்குழுவின் தலைவரான முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்தன.
அதன்பின் கட்டணக்குழு தலைவர் கட்டணக்குழுவை கலந்தாலோசித்து மீண்டும் கூட்டம் நடத்தி அரசாங்க ஒதுக்கீட்டிற்கான கட்டணம் ரூ.5.5 லட்சம் எனவும், தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.14 லட்சம் எனவும் தற்காலிகமாக கட்டணம் முடிவு செய்யப்பட்டது.
எனது அரசு கட்டணக்குழுவின் இறுதி முடிவிற்கு தனியார் கல்லூரிகள் காத்திருக்கும்பொருட்டு தனியார் கல்லூரிகள் அனைத்தும் கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தை ஒப்புக்கொண்டு சென்டாக் பரிந்துரை செய்த மாணவர்களை சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவிட்டது. மேலும் யாராலும் மாணவர்களுக்கு மறுப்போ, துன்புறுத்தலோ இருக்கக்கூடாது என்று கருதி இந்த கட்டணத்திற்கான வரைவோலைகளை மாணவர்களிடம் இருந்து பெற்று அந்தந்த கல்லூரிகளுக்கு அரசே அனுப்பியது.
தவறான வழிநடத்தல்இந்தநிலையில் கடந்த 30–ந்தேதி கவர்னர் சென்டாக் அலுவலகத்துக்கு சென்று, புதுவை அரசு ஒதுக்கீட்டு இடங்களை தனியார் நிர்வாக ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை தவறாக தெரிவித்து சென்டாக் கன்வீனரிடம் சில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு கடிதம் வழங்கும்படி உத்தரவிட்டார். இது முற்றிலும் சரியல்ல, மற்றும் தவறான வழிநடத்தலாகும்.
மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி நிரம்பாத இடங்கள் அனைத்தும் அகில இந்திய மாணவர்களின் ஒதுக்கீட்டிற்கு சென்றுவிடும். இதில் நமது விருப்பம் ஒன்றும் கிடையாது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதே முறைதான் கடைபிடிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் கவர்னர் சென்டாக் கன்வீனரிடம் 26 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு கடிதம் வழங்கும்படி வற்புறுத்தினார். இந்த 26 இடங்களில் 22 இடங்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், மீதி 4 இடங்கள் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கும் சேர்ந்ததாகும். நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் மாநில அரசின் கட்டண நிர்ணய குழுவின் அதிகார வரம்புக்குள் அடங்குகிறது என்று கவர்னர் உறுதி அளித்ததின் அடிப்படையில் இந்த 22 மாணவர்களும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களை தேர்வு செய்தனர்.
அதிகார வரம்பில் இல்லைஇருந்தபோதிலும் கட்டண குழுவின் தலைவரான முன்னாள் நீதிபதியும், மாநில சட்டத்துறையும், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கட்டணக்குழுவின் அதிகார வரம்பிற்குள் இல்லை என்று தெளிவாக தெரிவித்துள்ளனர்.
நமது மாநில மாணவர்கள் மகாத்மா காந்தி கல்லூரியில் 39 இடங்கள், வினாயகா மிஷன் கல்லூரியில் 13 இடங்கள், லட்சுமிநாராயணா கல்லூரியில் 8 இடங்கள், ஆறுபடைவீடு கல்லூரியில் 17 இடங்கள், பிம்ஸ் கல்லூரியில் 26 இடங்களில் சேர சேர்க்கை ஆணை பெற்றுள்ளனர். இதில் பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மட்டும் 10 பேர் சேர்ந்துள்ளனர்.
31–ந்தேதிக்குள் மாணவர்களை சேர்க்காத கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ் வாபஸ்பெறப்படும் என்றும் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகிகளை அழைத்தும் பேசினோம். அவர்கள் கட்டணம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். இருந்தபோதிலும் மாணவர்களிடம் எழுத்துப்பூர்வமான விவரங்களை பெற்றுக்கொண்டு சேருங்கள் என்றும் அவர்கள் ஏற்கவில்லை. நாங்கள் அகில இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசின் உத்தரவுப்படி கலந்தாய்வினை நடத்தி உள்ளோம்.
மக்களை ஏமாற்றுகிறார்கள்கடந்த ஆட்சியில் தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் முதுகலை படிப்பு இடங்களை பெற்று விற்பனை செய்துள்ளனர். அவர்கள் எங்களை குறை கூறுகிறார்கள். காலியாக இருந்த 71 இடங்களை மத்திய அரசுதான் நிரப்ப வேண்டும். இப்போது புதுவை மக்களை ஏமாற்ற சில தீய சக்திகள் வேலை செய்கின்றன. மாணவர்களை திசை திருப்பி வருகிறார்கள். அவர்கள் குறித்த விவரங்களை படிப்படியாக வெளியே கொண்டு வருவோம்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.