சென்னையில் 9–ந் தேதி முதல் 32 நாட்கள் ஆர்ப்பாட்டம் தஞ்சையில் அய்யாக்கண்ணு பேட்டி
விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகிற 9–ந் தேதி முதல் 32 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தஞ்சையில் அய்யாக்கண்ணு கூறினார்.
தஞ்சாவூர்,
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. 1 கோடி ஏக்கரில் பயிர்கள் கருகிவிட்டன. டெல்டா மாவட்டங்களில் 29 லட்சம் ஏக்கரில் பயிர்கள் கருகிவிட்டன. 1 ஏக்கரில் கூட சாகுபடி செய்யப்படவில்லை. சுப்ரீம்கோர்ட்டு பலமுறை உத்தரவு பிறப்பித்தும் காவிரி நீரை தர கர்நாடகஅரசு மறுக்கிறது. இதை மத்தியஅரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பாலைவனமாக்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது.
நாங்கள் விவசாயம் செய்யவில்லை என்றால் பிளாஸ்டிக்கால் ஆன அரிசி, முட்டை, உளுந்து, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இளைஞர்களின் உடல் பாதிப்பு மட்டுமின்றி அறிவை மழுங்கடிக்கும் சூழ்நிலை உருவாகும். பிளாஸ்டிக் பொருட்கள் மாடுகள் தின்று கொண்டு இருப்பதைபோல் நாமும் பிளாஸ்டிக்கால் ஆன உணவுகளை தான் சாப்பிட வேண்டிய நிலை உருவாகும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலையை கொடுக்க அரசு மறுக்கிறது.
ஓய்வூதியம்விவசாயிகள் எவ்வளவு போராடினாலும் நாட்டின் அடிமைகளாகவே பார்க்கப்படுகின்றனர். தேர்தல் வரும்போது நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்று சொல்வார்கள். தேர்தல் முடிந்துவிட்டால் அடிமைகளாக நினைக்கின்றனர். டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்தினோம். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களை சந்தித்தார். அப்போது அவர், பிரதமரை சந்தித்து பேசி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதையும் செய்வதாக சொன்னார். ஆனால் இதுவரை எதையும் அவர் செய்யவில்லை. இதனால் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 9–ந் தேதி முதல் அடுத்தமாதம்(ஜூலை) 10–ந் தேதி வரை 32 நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதன்பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் 100 நாட்களுக்கு வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தொடர்ந்து போராடுவோம்கரும்புக்கான நிலுவைத்தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். எரிவாயு எடுக்கமாட்டோம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளிப்பதுடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஜனநாயக நாட்டில் உரிமைகளுக்காக போராட்டம் நடத்துவது எங்களது கடமை. வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.