விவாகரத்து கேட்டதால் கழுத்தை அறுத்து மனைவி கொலை


விவாகரத்து கேட்டதால்  கழுத்தை அறுத்து மனைவி கொலை
x
தினத்தந்தி 3 Jun 2017 4:04 AM IST (Updated: 3 Jun 2017 4:04 AM IST)
t-max-icont-min-icon

விவாகரத்து கேட்டதால் மகன்கள் கண்முன்னே கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த அரசு கல்லூரி விரிவுரையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் விவாகரத்து கேட்டதால் மகன்கள் கண்முன்னே கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த அரசு கல்லூரி விரிவுரையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசு கல்லூரி விரிவுரையாளர்

பெங்களூரு இந்திராநகர் 14–வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மைலாரய்யா (வயது 56). இவரது மனைவி மஞ்சுளா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். 2–வது மகன் பி.யூ.சி. 2–ம் ஆண்டு படித்து வருகிறார். கோலார் தங்கவயலில் உள்ள அரசு கல்லூரியில் விரிவுரையாளராக மைலாரய்யா பணியாற்றி வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக மைலாரய்யாவுக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மைலாரய்யா, அவரது மகன்கள் வீட்டில் இருந்தார்கள். அப்போது மைலாரய்யாவுக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. உடனே தனக்கு விவாகரத்து கொடுக்கும்படி கணவர் மைலாரய்யாவிடம் மஞ்சுளா கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது

. கழுத்தை அறுத்து கொலை

அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த மைலாரய்யா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மகன்கள் கண்முன்னே மனைவி மஞ்சுளாவின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. உடனே மஞ்சுளாவை காப்பாற்ற 2 மகன்களும் முயன்றார்கள். மேலும் தந்தை மைலாரய்யாவை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தாய் மஞ்சுளாவை, அவரது மகன்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மஞ்சுளா பரிதாபமாக இறந்து விட்டார்.

இதற்கிடையில், மஞ்சுளாவை கொலை செய்த மைலாரய்யாவை அக்கம் பக்கத்தினர் பிடித்து இந்திராநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் மஞ்சுளா விவாகரத்து கேட்டதால் ஆத்திரமடைந்த மைலாரய்யா தனது மனைவியை கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

மைலாரய்யாவை, அவரது மகன்கள் தாக்கியதால் படுகாயம் அடைந்திருந்தார். இதனால் கைதான அவரை போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை பற்றி இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story