நடக்க முடியாத நிலையில் சக்கரநாற்காலி வழங்காததால் நோயாளியின் காலை பிடித்து மனைவி இழுத்துச்சென்ற அவலம்


நடக்க முடியாத நிலையில் சக்கரநாற்காலி வழங்காததால் நோயாளியின் காலை பிடித்து மனைவி இழுத்துச்சென்ற அவலம்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:06 AM IST (Updated: 3 Jun 2017 4:06 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 25–ந் தேதி அமீர்சாப்(வயது 75) என்பவர் சுவாசக்கோளாறு பிரச்சினைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

சிவமொக்கா,

சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் நடக்க முடியாத நிலையில் இருந்த நோயாளிக்கு சக்கரநாற்காலி வழங்காததால் அவரின் காலை பிடித்து மனைவி இழுத்துச்சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மனைவியின் உடலை சுமந்த தொழிலாளி

கடந்த ஆண்டு (2016) ஆகஸ்டு மாதம் ஒடிசா மாநிலம் காலஹண்டி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் இறந்த தனது மனைவியின் உடலை ஆம்புலன்சில் வீட்டிற்கு எடுத்து செல்வதற்கு பணம் இல்லாததால் தனாமஜ்கி என்ற தொழிலாளி 10 கிலோ மீட்டர் தூரம் தன் தோளில் சுமந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தனது 12 வயது மகளையும் உடன் அழைத்து சென்ற இந்த காட்சி பெரும் சோகத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

அதுபோன்ற ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் சம்பவம் கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் வருமாறு:–

கணவரின் காலை பிடித்து இழுத்துச்சென்ற மனைவி

கர்நாடக மாநிலம் சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 25–ந் தேதி அமீர்சாப்(வயது 75) என்பவர் சுவாசக்கோளாறு பிரச்சினைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி பமீதா உடன் இருந்து கணவரை கவனித்து வந்தார். இந்த நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அமீர்சாப்பிற்கு ‘ஸ்கேன்‘ எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

அமீர்சாப் நடக்க இயலாத நிலையில் இருந்தார். எனவே கணவரை ‘ஸ்கேன்‘ மையத்துக்கு அழைத்து செல்ல பமீதா ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் சக்கரநாற்காலி வேண்டும் என்று கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் சக்கரநாற்காலி வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கணவருக்கு எப்படியாவது ‘ஸ்கேன்‘ எடுக்க வேண்டும் என்பதற்காக பமீதா அவரை கைத்தாங்கலாக அழைத்து செல்ல முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அமீர்சாப்பால் நடக்க முடியாமல், தரையில் படுத்துவிட்டார். உடனே வேறு வழியின்றி கணவரின் காலைப்பிடித்து பமீதா இழுத்துச்சென்று இருக்கிறார். கடந்த 31–ந் தேதி மதியம் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணைக்கு உத்தரவு

இதுபற்றி அறிந்த கர்நாடக மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரணபிரகாஷ் பட்டீல் ‘‘சக்கரநாற்காலி வழங்கப்படாததால் நோயாளியின் காலைப்பிடித்து அவரது மனைவி தரையில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இது தொடர்பாக உடனே விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு இருக்கிறேன். அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அறிவித்து உள்ளார்.

அரசு ஆஸ்பத்திரி அதிகாரிகள் கூறும்போது, ஆஸ்பத்திரியில் தேவையான அளவுக்கு சக்கரநாற்காலிகள் உள்ளன. இந்த சம்பவம் நடந்து இருக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

மன்னிப்பு கேட்கிறேன்

இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை மந்திரி ரமேஷ் குமார் கூறியதாவது:–

‘‘இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். அப்போது சக்கரநாற்காலி வரும்வரை பொறுத்திருக்காமல் அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்று தெரிவித்தனர். இருந்தாலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்து இருக்கக்கூடாது. இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சம்பவத்துக்காக பொதுமக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழக்க வேண்டாம்.’’

இவ்வாறு மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி அமீர்சாப்பிடம் கேட்டபோது ‘‘நாங்கள் பலமுறை கேட்டுக்கொண்டபோதும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சக்கரநாற்காலி வழங்கவில்லை. எனவே தான் என் மனைவி எனது காலை பிடித்து இழுத்துச்சென்றார். அப்போது அங்கு வந்த சிலர் இதனை நேரில் பார்த்துவிட்டு எங்களுக்காக குரல் கொடுத்தனர். அதன் பிறகே சக்கரநாற்காலி கொடுத்தனர். என் மனைவி தரையில் போட்டு என்னை காலைப்பிடித்து இழுத்துச்சென்றதால் எனக்கு முதுகுவலி வந்து இருக்கிறது. டாக்டர்களும் முறையாக வந்து நோயாளிகளை கவனிப்பதில்லை’’ என்றார். அவரது மனைவி பமீதாவும் இதே கருத்தை தெரிவித்தார்.

நடக்க முடியாத நோயாளிக்கு அரசு ஆஸ்பத்திரியில் சக்கரநாற்காலி வழங்கப்படாததால், நோயாளியின் காலை பிடித்து அவரது மனைவி தரையில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story