கடத்தப்பட்ட 2½ வயது குழந்தை போலீசில் ஒப்படைப்பு; பெண் கைது
அரூரில் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றபோது கடத்தப்பட்ட 2½ வயது குழந்தையை போலீஸ் நிலையத்தில் பெண் ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் மேல் பட்சாபேட்டையை சேர்ந்தவர் சதீஸ், லாரி டிரைவர். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுக்கு சபரீஷ் (வயது7), ராகுல் (2½) என்ற 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ராகுல் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டு இருந்தான். பின்னர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க சென்ற குழந்தை ராகுல் வீட்டுக்கு வரும் சாலையை மறந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் சென்றுள்ளான்.
அப்போது பஸ் நிலைய பகுதிக்கு சென்ற குழந்தையை சுமார் 35 வயது பெண் தூக்கி சென்றார். குழந்தையை காணாத பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது குழந்தை மிட்டாய் வாங்க சென்ற மளிகை கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பார்த்த போது குழந்தையை ஒரு பெண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திய பெண் குறித்து விசாரணை நடத்தினர். குழந்தை கடத்தல் தொடர்பாக தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்–அப் ஆகியவற்றில் தகவல் வெளியானது.
போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்புஇந்தநிலையில் குழந்தையுடன் அரூர் அருகே உள்ள டி.அம்மாபேட்டையை சேர்ந்த மாது மனைவி முனியம்மாள் (35) என்பவர் அரூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் குழந்தை ராகுலை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஷ் விசாரணை நடத்தினார். அப்போது முனியம்மாள் தனது மகளை அரூர் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–1 சேர்க்க வந்தபோது சாலையில் குழந்தை அழுது கொண்டு சென்றது. குழந்தை குறித்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டேன். ஆனால் யாருக்கும் குழந்தையை அடையாளம் தெரியவில்லை.
இதனால் குழந்தையை தேடி யாராவது வந்தால் கொடுத்து விடலாம். இல்லை என்றால் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்து வீட்டுக்கு எடுத்து சென்றேன். அங்கு குழந்தை கடத்தப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனால் குழந்தையை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தேன். தான் குழந்தையை கடத்தவில்லை என்று போலீசாரிடம் முனியம்மாள் தெரிவித்துள்ளார்.
பெண் கைதுஇதுகுறித்து குழந்தையின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் பதறி அடித்து அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். குழந்தை ராகுலை தாயார் கனிமொழியிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஆண் குழந்தை கடத்தல் தொடர்பாக முனியம்மாளை போலீசார் கைது செய்தனர். குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.