வரகானப்பள்ளியில் சொத்து தகராறில் தாயை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது
வரகானப்பள்ளியில் சொத்து தகராறில் தாயை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள வரகானப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 63). இவரது மகன் கிருஷ்ணன் (43). விவசாயி. கிருஷ்ணன் தனது தாயிடம் சொத்து தொடர்பாக தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் தாய் – மகன் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜம்மாள் வீட்டில் இருந்த போது கிருஷ்ணன் அங்கு வந்து சொத்து தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜம்மாளை வெட்டினார். இதில் அவருக்கு முகம், வலது கை, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
விவசாயி கைது
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராஜம்மாள் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.