தம்மம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
தம்மம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தம்மம்பட்டி,
தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் தம்மம்பட்டி நடுவீதி 11–வது வார்டில் கடந்த 18 நாட்களாக தண்ணீர் வினியோகிக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று காலை 11 மணியளவில் நடுவீதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்புஇதுகுறித்து தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்த மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.