ரெயில் மறியல் செய்ய முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 9 பேர் கைது
சங்ககிரியில், மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் செய்ய முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்ககிரி,
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து சங்ககிரியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஆதித்தமிழர் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் இருந்து ஆதித்தமிழர் கட்சியினர் ரெயில் நிலையம் வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி பொதுச்செயலாளர் சுப.இளங்கோவன் தலைமை தாங்கினார். அப்போது இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
9 பேர் கைதுஇதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும், ரெயில் மறியல் செய்ய முயன்றதாக அவர்கள் 9 பேரை கைது செய்து சங்ககிரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சங்ககிரி ரெயில் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.